கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள் (Blessed are you whose God is  the Lord)

இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது, கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது (சங். 144:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ApL5e6MThLY

பூமியில் காணப்படுகிற எல்லாப் பாக்கியங்களிலும் மேலான பாக்கியம் கர்த்தரை தெய்வமாய்க் கொண்டிருப்பதாய் காணப்படுகிறது, அப்படிப்பட்டவர்களாகிய நீங்கள்  பாக்கியமுள்ளவர்கள். மோசே இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும் போது, இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே, உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள், அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொல்லி ஆசீர்வதித்ததை உபா. 33:29ல் வாசிக்கமுடிகிறது. 144வது சங்கீதத்தின் முடிவு வசனங்கள்   தாவீது ராஜா தன் தேசத்தின் சமாதானத்திற்காகவும், தன் ஜனங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஏறெடுத்த ஜெபமாய்க் காணப்படுகிறது. அப்படியானால் தாவீதின் குமாரனாய் பிறந்து அவனுக்கும் ஆண்டவராய்க் காணப்பட்ட பரலோக தாவீதாகிய இயேசு, அவரைப் பின்பற்றுகிற நாம் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும், ஆசீர்வாதத்தோடும் காணப்படுவதை   எவ்வளவு அதிகமாய் விரும்புகிறவராய்க் காணப்படுவார். 

நீங்கள் கர்த்தரை தெய்வமாய்க் கொண்டிருக்கும் போது, உங்கள் குமாரர்கள் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், உங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். பிள்ளைகள்தான், செங்கற்களாலும், சுவர்களினாலும், பலவிதப் பொருட்களாலும் காணப்படுகிற ஒவ்வொரு வீட்டையும் உயிருள்ள இல்லமாக மாற்றுகிறவர்கள். அவர்களால் தன் அம்பறாத்துணியை நிரப்பினவர்கள் பாக்கியவான்கள். சபைகளிலும் பிள்ளைகள் அதிகமாய்க் காணப்படும் போது, அது அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும்  கொண்டுவருகிறது. நமதருமை ஆண்டவரும் பிள்ளைகளை அதிகமாய் நேசித்து, அவர்களை ஆசீர்வதிக்கிறவர். புதல்வர்கள் வீரியத்துடன் ஓங்கி வளருகிற பசுமையான மரங்களைப் போலக் காணப்படும் போது, குடும்பத்திற்கும் கர்த்தருடைய பணிக்கும் அவர்கள் ஆசீர்வாதமாய்க் காணப்படுவார்கள். புதல்விகள் நேர்த்தியாய் செதுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட கற்களாகவும், அரண்மனையைத் தாங்கி நிற்கிற மூலைக்கற்களைப் போலவும், தூண்களாகவும் காணப்படும் போது, அவர்கள் குடும்பங்களையும் ஊழியங்களையும் கூட தாங்கி, ஆசீர்வாதமாய்க் காணப்படுவார்கள். அதுபோல நம்முடைய களஞ்சியங்களையும், நாம் கையிட்டுச் செய்கிற சகல காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க விரும்புகிறார். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய உங்களை எல்லா விதங்களிலும் ஆசீர்வதிப்பது ஆண்டவருக்குப் பிரியமாய்க் காணப்படுகிறது. உபாகமம் 28:1-14 வசனங்களில் எழுதப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களையும் உங்களுக்குத் தந்து உங்களை மேலாக வாழவைப்பார். நீங்கள் நற்சீரைப் பெற்று ஆசீர்வாதமாய்க் காணப்படும் போது உங்களைக் காண்கிறவர்கள் எல்லாரும் பாக்கியவான்கள் என்று அறிக்கையிடுவார்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *