தாய் மகனுக்கு கொடுக்கும் அறிவுரை (Advice given by a mother to her son)

நீதி 31 : 1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CpHKjsz9ZMU

இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில், லேமுவேல் என்ற பெயரில் எந்த ராஜாவும் இருந்ததில்லை. சவுல் தொடங்கி கடைசி ராஜா வரை, இஸ்ரவேலில் அனைத்து ராஜாக்களின் பெயர்களும் ‘இராஜாக்கள்’ (Kings) மற்றும் ‘நாளாகமங்கள்’ (Chronicles) ஆகிய புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவற்றில் லேமுவேல் என்ற பெயரை நாம் எங்கும் காணமுடியாது. ஒருவேளை, இது சாலொமோனின் மற்றொரு பெயராக இருக்கலாம் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். காரணம், இந்தப் பெயருக்கு ‘தேவனோடு இருப்பவர்’ என்று பொருள். நான்காம் அதிகாரத்தில் சாலொமோன் தனது தகப்பனாகிய தாவீதிடமிருந்து ஆலோசனையைப் பெற்றுக்கொண்டான். ஒருவேளை, லேமுவேல் சாலோமோனாக இருக்கக்கூடுமானால், சாலொமோனுக்கு தன்னுடைய தகப்பனிடமிருந்தும் தாயினிடமிருந்தும் நல்ல ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளும் சிலாக்கியம் கிடைத்தது. தீமோத்தேயுவின் தாய் தன் மகனுக்கு தேவனுடைய வார்த்தையைக் கற்பித்தது போல, இங்கேயும் ஒரு தாய் தனது மகனுக்கு நல்ல அறிவுரையை வழங்குகிறாள்.

எப்படி இருந்தாலும் இந்த அதிகாரத்தில் ஒரு தாய் தன்னுடைய மகன் இராஜாவாக இருந்தாலும் அவள் கொடுக்கும் முக்கியமான ஆலோசனைகளை எல்லாரும் கடைபிடித்தால் குடும்பவாழ்வு சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்கும்.

10 முதல் 31 வரையிலான வசனங்களில் ஒரு தாய் தன்னுடைய மகனிடம், “மனைவியைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்று கூறுகிறார். முதலில் குறிப்பிடப்படுவது என்னவென்றால், அவள் நற்பண்புகள் கொண்ட ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என்பதுதான். குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது என்று வசனம் கூறுகிறது. அவளுடைய திறமைகள், கல்வி, பட்டப்படிப்பு அல்லது ஆற்றல்களைப் பற்றி இங்கே பேசப்படவில்லை. மாறாக அவளுடைய நல்ல குணநலன்களையே குறிப்பிடுகிறது.

இந்நாட்களில் பெண் எப்படி இருக்கிறாள், அழகாக இருக்கிறாளா? நிறமாக இருக்கிறாளா? படித்திருக்கிறாளா என்றே அதிகமாகப் பார்க்கிறார்களே தவிர அவளுடைய குணநலன்கள் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட நல்ல குணாதிசயங்களைப் பெற்றுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பது கடினம்தான். காரணம், அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. இந்நாட்களில் எந்தப் பெண்ணால்தான் “நான் என் கணவருக்கு முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றவள்” என்று சொல்லமுடியும்? இல்லையென்றால், எந்தக் கணவர்களால்தான், “நான் முத்துக்களைப் பார்க்கிலும் விலையுயர்ந்த மனைவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவனாக இருக்கிறேனா” என்று சொல்லமுடியும்? இந்த அதிகாரம் முழுவதும் தாய் மகனுக்குக் கொடுக்கும் ஆலோசனையாக இருந்தாலும், திருமணமாகாதவர்கள், திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் என்று எல்லாரும் படித்து தெய்வீக ஆலோசனையின்படி ஜீவித்தால் நம்முடைய எதிர்காலம் மகிழ்ச்சியாய் இருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *