நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும் (Goodness   and mercy shall follow you)

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (சங்.23:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WWa_rbX3Q1g

கர்த்தரைத் தங்களுடைய மேய்ப்பராய் கொண்டு,  அவருக்குப்  பின்செல்லுகிறவர்களுக்கு, கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாய் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்களைக்  கர்த்தருடைய நன்மையும் கிருபையும் பின்தொடர்ந்து செல்லும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசீர்வாதமாய் காணப்படுவீர்கள். கிருபை என்ற வார்த்தைக்கு steadfast love என்ற ஆங்கில வார்த்தை சில மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு ஆண்டவருடைய உறுதியான, நிபந்தனையற்ற, உண்மையான அன்பு என்பதும் அர்த்தமாய் காணப்படுகிறது. ஆகையால் இயேசுவை மேய்ப்பராய் கொண்டு வாழ்கிறவர்களை அவருடைய நன்மையும், கிருபையும், அன்பும் பின்தொடரும். இவை சிலநாட்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உங்களைத் தொடர்ந்து வரும். 

கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் நன்மையும், கிருபையும் நம்மைத் தொடரவேண்டும் என்று விரும்புகிறோம். குறைச்சல்களும், பற்றாக்குறைகளும், தரித்திரங்களும், கடன்களும் இல்லாதபடி நிறைவாக வாழவேண்டும் என்றும் எண்ணுகிறோம். இயேசுவும் உங்களைக்குறித்து அதையே விரும்புகிறார். வேதத்தில் இரட்சிப்பைத் தவிர மற்றவையெல்லாம்  நிபந்தனைகளோடு  கூடிய ஆசீர்வாதங்களாய் காணப்படுகிறது. நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்க்கையின்  மேய்ப்பராய் கொண்டு, அவருடைய கைக்குள்ளான ஆடுகளாய் காணப்படும் போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆகையால் அவருடைய சத்தத்தை அறிந்து, அவரை பின்பற்றுகிற ஆடுகளாய் காணப்படுங்கள்.  அனேக வேளைகளில் இஸ்ரவேல்  ஜனங்கள், கர்த்தரை மேய்ப்பராய்  கொள்ளுவதற்குப் பதிலாக வேறு பலரைத் தங்களுடைய தலைவர்களாகவும், மேய்ப்பர்களாகவும் ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல, அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள் என்று ஓசியா 8:4 கூறுகிறது.  கர்த்தரை தள்ளிவிட்டு, புறஜாதிகளைப் போல எங்களுக்கு ராஜா வேண்டும் என்று சாமுவேலிடம் கேட்டார்கள், அது ஆண்டவருடைய இருதயத்தை வேதனைப் படுத்தியது, இருப்பினும் கர்த்தர் சவுலை அவர்களுக்கு ராஜாவாகக் கொடுத்தார். அவனுடைய குமாரனாகிய  சாலொமோன் தவறான  முன்னுதாரணத்தை  வைத்துச் சென்றார்.  யூதாவிலும்,  இஸ்ரவேலிலும்  தோன்றின அனேக ராஜாக்கள் கர்த்தருடைய ஜனங்களைத் தவறாக வழிநடத்தினார்கள்.

நீங்கள் இயேசுவை மட்டும் உங்கள் மேய்ப்பனாகக் கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்பற்றும் போது, நீங்கள் தாழ்ச்சியடைவதில்லை, கர்த்தர் உங்கள் தேவைகளைச் சந்திப்பார், உங்களை நீதியின் பாதைகளில் நடத்துவார், கடினமான சூழ்நிலைகளிலும்,   ஆபத்துகளிலும் உங்களளோடிருந்து உங்களைத் தப்புவிப்பார். உங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *