ஒவ்வொரு தொழிலிலும் நேர்மை (Fairness in every business)

நீதி 16 : 11 சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JVfUe4Hd548

இந்த உலகத்தில் தொழில் செய்ய வேண்டுமென்றால், மற்றவர்களை ஏமாற்றினால் தான் லாபம் அதிகம் ஈட்ட முடியும் என்ற எண்ணம் அநேகருக்கு உள்ளது. மாத்திரமல்ல, பொய் சொன்னால் தான் தொழிலில் கொடிகட்டிப் பறக்க முடியும் என்றும், மற்றவர்களுக்கு லஞ்சம் கொடுத்தும் லஞ்சம் வாங்கியும் இருந்தால் தான் தொழிலில் முன்னேற முடியும் என்ற சூழ்நிலையில் பல கிறிஸ்தவர்களும் காணப்படுகிறார்கள். தேவ ஜனங்களே, ஒரு பொருளை வாங்குவதிலும் விற்பதிலும் மிகப் பெரிய பாவம் இருக்கிறது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நாம் எதையாவது விற்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேறு யாராவது நம்மை ஏமாற்றினால், நாம் கவலைப்படத் தேவையில்லை; அது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆனால் நாம் இன்னொருவரை ஏமாற்றினால், அது பெரிய விஷயம். நீங்கள் ஒருவரை ஒரு ரூபாய் ஏமாற்றியிருந்தால், அது இன்னொருவர் உங்களை 1,000 ரூபாய் ஏமாற்றுவதை விட மிகவும் பெரிய விஷயம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் உலகில், மக்கள் அதை அப்படிப் பார்ப்பதில்லை. வேறு யாராவது தங்களை 1,000 ரூபாய் ஏமாற்றும்போது அவர்கள் அதிகம் கவலைப்படுகிறார்கள், ஆனால் தாங்கள் இன்னொருவரை ஒரு ரூபாய் ஏமாற்றும்போது அவர்கள் சிறிதும் கலங்குவதில்லை. வேறு யாராவது தன்னை 1,000 ரூபாய் ஏமாற்றுவதை விட, தான் ஒருவரை ஐம்பது பைசா ஏமாற்றியதுதான் உண்மையான விசுவாசியை அதிகம் கலங்க வைக்கிறது. உலகில் உள்ள மக்கள் அவர்கள் விரும்பியபடி வாழட்டும். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அவ்வாறு காணப்படலாகாது.

ஒவ்வொரு வியாபார ஒப்பந்தத்திலும் கர்த்தர் நேர்மையை எதிர்பார்க்கிறார். அதாவது, நாம் பணம் சம்பந்தமாக, வாங்குவதிலோ அல்லது விற்பதிலோ ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும், நாம் நேர்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். யாரிடமிருந்து நாம் எதையாவது வாங்குகிறோமோ, அந்த நபரிடமும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். அதிக லாபத்திற்காக சாதாரண மக்களைச் சுரண்டுவது கர்த்தருக்குப் பிரியமில்லாதது என்பதை அறிந்துகொள்ளுங்கள். கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது. மற்றவர்களை ஏமாற்றிச் சம்பாதிக்கும் எந்தவொரு ஐசுவரியமும் சமாதானத்தைக் கொண்டு வராது. கொஞ்சம் சம்பாதித்தாலும் அதில் நேர்மையாகக் காணப்படுங்கள். காரணம், கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைப் பெருகப்பண்ணும், அந்த ஆசீர்வாதத்தில் வேதனைகள் இருப்பதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *