யூதா 4. பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4cAAB-Bk2v0
விசுவாசத்தைப் குறித்த செய்திகளுக்கு இந்நாட்களில் பஞ்சமில்லை. விசுவாசித்தால் நாம் தேவனுடைய மகிமையைக் காண்போம் என்பது சத்தியம். அதேவேளையில், அந்த விசுவாசத்திற்காக நாம் போராடவேண்டும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. விசுவாசித்தால் பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளலாம், விசுவாசித்தால் அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளலாம், விசுவாசித்தால் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளலாம் என்றே அநேக பிரசங்கங்கள் காணப்படுகின்றன. அதை மாத்திரம் கேட்கும் விசுவாசிகளின் எண்ணிக்கையும் அநேகமாய் காணப்படுகிறது. அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டிய ஒரே போர்க்களம் ஒன்று காணப்படுகிறது. அது பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார்.
கொரிந்தியர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். நாம் சண்டை போட வேண்டுமென்றால், அது கணவனோடு அல்ல; மனைவியோடும் அல்ல; அல்லது வேறு எவரிடமும் அல்ல. “பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காகவே” போராடவேண்டும். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மனுஷீகப் பாரம்பரியத்தால் புதைக்கப்பட்ட, ஆதி அப்போஸ்தலர்கள் கண்ட “அந்த மெய் விசுவாசத்திற்காகவே” போராட வேண்டும்.தேவன் இப்படிப் புதைக்கப்பட்ட சத்தியங்களை மீட்டெடுக்க பல தேவ மனிதர்களை எழுப்ப ஆரம்பித்தார்; இன்றும் அப்படிப்பட்ட ஊழியர்களை, விசுவாசத்திற்காகப் போராடுகிற தேவ மனிதர்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்.
“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற இரட்சிப்பின் சத்தியத்தை மார்ட்டின் லூத்தர் மூலம் தேவன் மீட்டெடுத்தார். ஆனால் மார்ட்டின் லூத்தரோ, தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றி ஒன்றும் கூறாதவராய் இருந்தார். அதற்கு தேவன் இன்னொருவரைத் தன்னுடைய கால அட்டவணையின்படி எழுப்ப வேண்டியிருந்தது.
பின்பு தேவன் பரிசுத்த ஆவி அபிஷேகத்தின் சத்தியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். பரிசுத்த ஆவியானவரின் வரங்கள், மணவாட்டியான சபையின் சத்தியங்கள், கடைசி கால எழுப்புதல் சத்தியங்கள், இயேசுவின் வருகையைக் குறித்த சத்தியங்கள் என்று பல சத்தியங்களை தேவ மனிதர்கள் மூலம் ஆவியானவர் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். போடப்பட்ட அஸ்திபாரமாகிய இரட்சிப்பைக் குறித்து மட்டுமே பேசிக்கொண்டிராமல், விசுவாசத்திற்காகப் போராடுகிறவர்களாக நாம் காணப்படுவோம். விசுவாசத்திற்காக போராடும் போராட்டம் சாதாரணமான போராட்டமாக அல்ல , தைரியமாய் போராடவேண்டும் என்றே கர்த்தர் கூறுகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

