அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது (லூக்கா 22:44)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OLfDXDJbQWk
வியாகுலம் என்ற சொல் கிரேக்க மூலப்பதத்தில் கடுமையான போராட்டம், ஆழ்ந்த கவலை, அல்லது ஆத்துமாவின் யுத்த நிலையை விளக்குகிறது. உடலளவிலும், மனதளவிலும் தாங்கமுடியாத அளவிற்கான மன அழுத்தத்தையும், துன்ப நிலையையும் குறிக்கிறதாய்க் காணப்படுகிறது. இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களில் மனுஷ குமாரனாய், அதாவது நம்மைப் போன்ற மனிதனாகக் காணப்பட்டதினால், மனுகுலத்தை மீட்பதற்கு, சிலுவைப் பாடுகளின் வழியாகக் கடந்து செல்லவேண்டியிருந்ததால், அவர் மிகவும் வியாகுலப்பட்டு உடல் மற்றும் மனதளவில் நெருக்கப்பட்டார்.
இந்நாட்களில் ஜனங்கள் உடல் மற்றும் மன அழுத்தங்களினால் அதிகமாய் பாதிக்கப்படுகிறார்கள். வேலைப்பழுக்கள், குடும்ப சூழ்நிலைகள், உணர்ச்சி ரீதியான மன அழுத்தங்கள், தேவைகளினால் உண்டாகும் அழுத்தங்கள், ஊழியங்களில் உண்டாகும் நெருக்கங்கள், இப்படிப்பட்ட அனேகக் காரியங்களினால் அதிகமாய் பாதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களும் ஆடம்பரம், வசதியான வாழ்க்கை, விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் பொருட்களைக் காட்டி, அவைகளுக்காக அதிகமாக உழைப்பதும், இல்லையே என்ற ஏக்கமும் கூட மனதளவில் ஜனங்களைப் பாதிக்கிறது. வசதியாய் வாழ்ந்த யோபு திடீரென்று பாடுகளின் பாதையில் சென்ற வேளையில் கூறினான், ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான் என்பதாக. மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான் என்று யோபு 5:7 கூறுகிறது. 130வது வயதில் யாக்கோபு பார்வோனுக்கு முன்பாக நின்ற வேளையில் என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது என்றான். கண் கண்டதையெல்லாம் அனுபவித்த சாலொமோன் ராஜா கூறினான், என் வாழ்வை வெறுத்தேன், சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது என்பதாக.
கர்த்தருடைய பிள்ளைகளே, மன அழுத்த வேளையில், உங்கள் கவனத்தை ஆண்டவர் பேரிலும், அவருடைய வார்த்தை மற்றும் வாக்குத்தத்தங்கள் மேல் திருப்புங்கள். யோபு கடினமான சூழ்நிலையில் அவனுடைய கண்களைக் கர்த்தருக்கு நேராக ஏறெடுத்து, என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன், அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும் என்றான் என்பதை நினைவு கூறுங்கள். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்று இயேசு கூறியதை மறந்து போகாதிருங்கள்;. அவர் சகலவித ஆறுதலின் தேவன், உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவர். உங்கள் எண்ணங்கள், நினைவுகள், சிந்தைகள் எல்லாம் இயேசுவுக்கு நேராகத் திருப்பப்படும் போது, அவர் கெச்சமனேயில் தான் கடந்து சென்ற பாடுகளை நினைவு கூர்ந்து, உங்கள் நெருக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுவித்து, உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

