பரிசுத்த நகரத்தின் பிரகாசம் (The Radiance of the Holy City)

வெளி 21 : 10 , 11 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lkwzJFFR6yY

நாம் வாழப்போகும் பரிசுத்த நகரத்தின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருக்கும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. இந்நாட்களில் இரத்தினக்கல்லை எல்லா இடங்களிலும் பார்க்கமுடியாது. எங்கோ சில இடங்களில் மட்டுமே நாம் பார்க்கமுடியும். ஆனால் நாம் வாழப்போகும் புதிய எருசலேம் முழுவதும் இரத்தினக்கல் காணப்படும் என்பது நமக்கு வியப்பை தருகிறது.

பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல் என்பது தூய்மையைக் குறிக்கிறது. பளிங்கிற்கு ஒரு சுபாவம் காணப்படுகிறது. அது ஒளி ஊடுருவும் தன்மை உடையது. நம்முடைய வாழ்வும் இந்த பூவுலகில் பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப் போலக் காணப்பட வேண்டும். நம்முடைய உள்தோற்றத்தைப் பார்க்கும்போது, வெளித்தோற்றத்தைப் போல சமநிலையில் இருப்பதாகக் காணப்படவேண்டும். அந்தரங்க வாழ்வும், வெளிப்புறமான வாழ்வும் ஒன்றாகக் காணப்பட வேண்டும். இந்நாட்களில் சபையிலிருக்கும் பல விசுவாசிகளின் சுபாவம், அநேக ஊழியக்காரர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பார்க்கும்போது, வெளித்தோற்றத்திற்கும், அவர்களின் அந்தரங்க வாழ்விற்கும் சற்றும் தொடர்பே இல்லாதவாறு காணப்படுகிறது. இப்படி இருப்பவர்கள் நிஜத்தில் புதிய எருசலேமின் வாழ்வை அனுபவிக்க முடியாது.

இயேசுவைக் குறித்து யோவான் அப்போஸ்தலன் தரிசனத்தில் பார்த்து இப்படிச் சொல்லுகிறான், வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போலத் தோன்றிற்று (வெளி 4 : 3) என்பதாக. இயேசுவும் வச்சிரக்கல்லுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறார். அவரில் எவ்வளவும் பரிசுத்தக் குறைச்சல் இல்லை என்பதை இது குறிக்கிறது. வச்சிரக்கல் இரத்தினம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைப் பார்க்கவோ வாங்கவோ வசதி வாய்ப்பு நமக்கு இல்லாமல் இன்று காணப்படலாம். ஆனால் நாம் போய் வசிக்கும் பரிசுத்த நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வச்சிரக்கல் இரத்தினம் போன்றவைகள் காணப்படும். எவ்வளவு விலையுயர்ந்த ஒரு நகரத்தை இயேசு உங்களுக்காக ஆயத்தம் பண்ணுகிறார் என்ற சிந்தையோடு, அந்த பரிசுத்த நகரத்தின் மேல் கண்களைப் பதித்து, இந்த பூவுலகில் வெற்றியுள்ள வாழ்க்கையை வாழுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *