யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? (மீகா. 2:7).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qxC9Kp6j3wk
யாக்கோபு வம்சம் என்று பேர் பெற்றவர்களாகிய, ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய உங்களைப் பார்த்து ஆண்டவர் கூறுகிறார், நீங்கள் செம்மையாயும், உத்தமமாயும் நடந்தால் என் வார்த்தைகள் உங்களுக்கு நன்மை செய்யும் என்பதாக. சகரியா, எலிசபெத்து என்ற தம்பதிகள் தேவனுடைய சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆகையால் அவர்களுடைய வயோதிப நாட்களில் கூட பிள்ளைகள் இல்லாத அவர்களுக்கு ஆண் மகனைக் கொடுத்து கர்த்தர் நன்மை செய்தார். யோபு உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். ஆகையால் கர்த்தர் அவன் இழந்துபோன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் கொடுத்து ஆசீர்வதித்தார். நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம் என்று சங்.37:37 கூறுகிறது. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே நம்மைப் பார்த்தும் ஆண்டவர் கூறுகிற வார்த்தை என்னவெனில் எனக்கு முன்பாக நடந்து உத்தமனாயிருங்கள் என்பதாகும். உத்தமமும் செம்மையான ஜீவியம் செய்ய உங்களை அர்ப்பணியுங்கள், உங்கள் காரியங்கள் எல்லாவற்றிலும் உத்தமம் காணட்டும், அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கடைசி நாட்களில் செம்மையாய் நடக்கிறவர்களைப் பார்ப்பது கடினமாய் காணப்படுகிறது. கர்த்தருடைய ஜனங்கள் என்று தங்களை அழைக்கிறவர்களும் கூட கோணல்களும், மாறுபாடும் உள்ளவர்களாய் காணப்படுகிறார்கள். கடன் வாங்குவதும் திரும்ப கொடாமல் இருப்பதும், வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும், ஆகாத வழிகளில் பொருட்களைச் சம்பாதிப்பதும், மாம்சீக எண்ணங்களோடு கர்த்தருடைய ஆலயத்திற்கு வருவதும், தேவனுடைய காரியங்களில் கூட மாறுபாடுகளோடு காணப்படுவதும்;, இப்படிப்பட்ட பலவிதமான மாறுபாடுகள் இன்றைய கிறிஸ்தவர்களிடம் காணப்படுகிறது. பிலேயாமுடைய வழிகள் கர்த்தருக்கு மாறுபாடாய் காணப்பட்டது, ஆகையால் கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று, எனக்கு விலகாமலிருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார் (எண். 22:32, 33). உங்களுடைய வழிகளில் கர்த்தருக்குப் பிரியமில்லாத மாறுபாடுகளும் தாறுமாறுகளும் காணப்படும் போது கர்த்தர் உங்களுக்கு எதிரியாக மாறிவிடுவார் என்பதை மறந்து போகாதிருங்கள். இஸ்ரவேல் ஜனங்களைப் போல் தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகத்தைப் போலக் காணப்படாதிருங்கள். நீங்கள் செம்மையாய் நடக்கும் போது, கர்த்தருடைய வார்த்தைகள் உங்களுக்கு நன்மை செய்யும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae