சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான், அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான், அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி. 4:26)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tLHDDjWR1gI
ஆதாமுடைய குமாரர்களாகிய காயீன் மற்றும் சேத்துடைய வம்ச வரலாற்றைக் குறித்து ஆதியாகமம் 4, 5ம் அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ளது. காயீனுடைய சந்ததி அநீதியினால் நிறைந்தவர்களாகவும், உலகத்திற்குரியவர்களாகவும் காணப்பட்டார்கள். சேத்தின் சந்ததி பக்தியுடையவர்களாகவும், கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களாகவும் காணப்பட்டார்கள். காயீனுடைய சந்ததி வெள்ளத்தினால் முழுவதும் அழிந்து போனார்கள். சேத்தின் சந்ததி வெள்ளத்தினால் உண்டான அழிவிற்குத் தப்பி, இயேசுவின் வம்ச வரலாற்றில் இடம்பிடித்தார்கள். அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன் என்றும் வம்ச வரலாற்றின் கடைசியில் ஏனோஸ் சேத்தின குமாரன், சேத் ஆதாமின் குமாரன், ஆதாம் தேவனால் உண்டானவன் என்றும் லூக்கா 3:23,38ல் எழுதப்பட்டுள்ளது.
காயீன் மற்றும் சேத்தின் வம்சத்தில் இரண்டு பேர் ஒரே பெயரை உடையவர்களாய் காணப்பட்டார்கள். காயீனுடைய குமாரன் பெயர் ஏனோக்கு, காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு ஏனோக்கு என்று பெயரிட்டான், அதை ஏனோக்கும் விரும்புகிறவனாய் காணப்பட்டான். இந்நாட்களிலும் அனேகர் கட்டுகிற வீடுகள், தங்களுடைய ஆஸ்திகள், சபைகளில் வாங்கி வைக்கிற பொருட்கள் எல்லாவற்றிற்கும் தங்கள் பெயர்களைப் போட விரும்புவதுண்டு. தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம் அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள் என்று சங்.49:11 கூறுகிறது. ஆகையால் அப்படிப்பட்ட காரியங்கள் கர்த்தருடைய பார்வையில் பெருமையை வெளிப்படுத்துகிறதாய்க் காணப்படுகிறது. ஆனால் தேவனைத் தொழுதுகொண்ட சேத்தின் வம்சத்தில் வந்த ஏனோக்கு, தேவனோடு சஞ்சரிக்கிறவனாய் காணப்பட்டான். அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று சாட்சி பெற்றான். ஏதேனுக்கு வெளியே, கர்த்தரோடு நடக்க முடியும் என்று முதன்முதலில் நிரூபித்துக் காட்டினவன் இவனாய் காணப்படுகிறான். ஆகையால் கர்த்தர் அவனை எடுத்துக் கொண்டார், இன்று அவன் தேவனோடு காணப்படுகிறான்.
காயீன் வம்சத்தில் வந்த இன்னொருவன் லாமேக்கு. இவன் முதன்முதலாய் இரண்டு பெண்களை விவாகம் செய்து பலதார மணத்தைத் தொடங்கி வைத்தவன். தேவன் ஆண் என்று ஒருவனையும், பெண் என்று ஒருத்தியையும் சிருஷ்டித்து அவர்களை விவாகத்தில் இணைத்து, இரண்டு பேரையும் ஒரே மாம்சமாக்கி, ஒன்றாக்கினார். அதுதான் அன்றைக்கும், இன்றைக்கும் தேவனுடைய சித்தமாய் காணப்படுகிறது. ஆனால் இன்றைக்கு உலக அரசியல் தலைவர்களாய் காணப்பட்டாலும், சினிமா கதாநாயகர்களாய் காணப்பட்டாலும், பெருவணிகர்களாய் காணப்பட்டாலும், சபைத்தலைவர்களாய் காணப்பட்டாலும் தேவசித்தத்திற்கு விரோதமாய் வாழும் போது, அதை உலகமும் சபையும் அங்கீகரிக்கிறது. சேத்தின் வம்சத்தில் வந்த லாமேக்கு கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தவன், அவனுக்கு ஒரு குமாரன் பிறந்த பொழுது, கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். நோவா நீதிமானாய் வாழ்ந்து, அவனையும் அவன் குடும்பத்தையும் பெருவெள்ள அழிவுக்குத் தப்பிக் காத்துக் கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தரை தொழுதுகொண்ட சேத்தின் சந்ததி வாழ்ந்ததைப் போல, நீங்களும் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது, நீங்களும் உங்கள் சந்ததியும் வாழ்ந்திருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

