1 தீமோ 3 : 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mbMieb7inQg
ஒரு விசுவாசி தேவபக்தியில் ஊக்கமில்லாமல் இருப்பதையோ, அல்லது அவன் ஒரு கோழையாக, சத்தியத்திற்காக நிற்கப் பயந்து, மற்றவர்களின் விமர்சனத்திற்கு அஞ்சி நிற்பதையோ தேவன் கண்டால், தேவன் சத்தியத்தை அவனிடமிருந்து மறைப்பார். தேவன் தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு மட்டுமே தமது இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் (சங். 25:14). தேவனுடைய காரியங்களில் பயத்தோடு இருப்பது ஆபத்தானது. ஏனெனில் பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று வெளி 21:8 கூறுகிறது. இந்த பட்டியலில் முதலாவது வருவது பயப்படுகிறவர்கள்.
நாங்கள் “இந்த சத்தியத்திற்கு ஒரு தூணாகவும் ஆதாரமாகவும்” (1 தீமோ. 3:15) நின்று, அதைத் தைரியமாகவும் வெட்கமின்றியும் பிரகடனப்படுத்தினோம் என்று பவுல் கூறுகிறார். தேவபக்தியின் இரகசியம், இயேசு மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதில் ஆரம்பமாகிறது. இதை நாம் முதலாவது விசுவாசிக்க வேண்டும், அதை அறிக்கையிட வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இயேசு தன்னை மரணப்பரியந்தம் தாழ்த்தினார் என்று விசுவாசிக்க வேண்டும். அடுத்து, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார் என்பதை விசுவாசிக்க வேண்டும். இயேசு நீதிமான் என்று போர்சேவகனும் அறிக்கையிட்டான். இவரில் ஒரு குற்றமும் காணவில்லை என்று பிலாத்தும் கூறினான். மாத்திரமல்ல, அவர் தேவதூதர்களால் காணப்பட்டார்; தேவதூதர்கள் வந்து இயேசுவின் பிறப்பைப் பற்றி பிரசங்கம் செய்தார்கள். புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட அப்போஸ்தலனாகிய பவுலைத் தெரிந்துகொண்டார். இன்றும் இயேசு புறஜாதிகளின் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறார். அவர் இந்த உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார். விசுவாசத்தினால் வராதது எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகிறது. இயேசு உங்கள் வாழ்க்கையில் அற்புதத்தைச் செய்வார் என்று விசுவாசிப்பதை விட முதலாவது, இயேசுவையே விசுவாசியுங்கள். அவரே உங்கள் ரட்சகர், அவரே உங்கள் நாயகர். கடைசியாக அவர் மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடிருக்கிறேன் என்று கூறியவர் மகிமையில் ஏறெடுக்கப்பட்டு, பிதாவின் வலதுபாரிசத்தில் இன்று நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார். இவைகளனைத்தும் தேவபக்திக்குரிய இரகசியம் என்று பவுல் குறிப்பிடுகிறார். தேவபக்திக்குரிய இரகசியங்களை விசுவாசியுங்கள். காரணம் இது மகாமேன்மையுள்ளது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

