இவருக்குச் செவிகொடுங்கள்.

பேதுரு பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று (மத்தேயு 17:5).

இயேசு தன்னுடைய ஊழியத்தின் பாதையில் ஒரு நாள் பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்துக்கொண்டு, உயர்ந்த மலையின்மேல் ஏறி, அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். உடனே பேதுரு இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். அப்பொழுது பிதாவின் சத்தம் ஒளியுள்ள மேகத்திலிருந்து தொனித்தது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள். பேதுரு தான் என்ன பேசுகிறேன் என்று அறியாதபடி இயேசுவை மோசேயோடும் எலியாவோடும் ஒப்பிட்டு மூன்று கூடாரங்களைப் போட நினைத்த வேளையில், பிதாவாகிய தேவன் பேதுருவைப் பார்த்து நீ பேசுவதை நிறுத்தி, இயேசுவுக்குச் செவிகொடுக்கும்படி கூறுகிறார். பேதுரு இந்த சம்பவத்தைக் குறித்து எழுதும் போது, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடே கூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:17,18). இயேசுவின் சத்தத்தைக் கேட்பதற்கு நம் செவிகள் திருப்பப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். 

கர்த்தருடைய சத்தத்தை கேட்பதற்குக் உயர்ந்த மலையின் அனுபவம் அவசியம். தேவனோடு தனித்திருக்கும் அனுபவம் வேண்டும். மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு தனிமனிதனாய் ஓரேப்பர்வதம் மட்டும் வந்த வேளையில் முட்செடியில் தோன்றின அக்கினியின் மூலம் கர்த்தர் அவனோடு பேசினார். கர்த்தருடைய சத்தம் அவனுக்குத் தொனித்தது. சீனாய் மலையில் கர்தத்ரோடு தனித்து 40 நாட்கள் காணப்பட்ட வேளையில் கர்த்தர் மோசேயோடு பேசினார், பிரமாணங்களைக் கொடுத்தார், ஆசாரிப்புக் கூடாரத்தைக் குறித்தும் பேசினார், மோசேயின் முகம் பிரகாசித்தது. கர்த்தரோடு தனித்திருக்கும் நேரங்களில் கர்த்தர் நம்மோடு பேசுகிறவர். ஜெபத்தின் மூலம் பேசுகிறவர். வேதத்தின் மூலம் நம்மோடு பேசுகிறவர், செய்திகளின் மூலம் பேசுகிறவர். யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாய் காணப்படவேண்டும் என்றும் வேதம் எச்சரிக்கிறது.

கர்த்தர் நம்முடன் பேசியும் அனேக வேளைகளில் நாம் செவிகொடுப்பதில்லை. கடைசியாக நாம் இயேசுவுக்குச் செவிகொடுத்த வேளை எது என்ற ஒரு கேள்வி எழும்பும் என்றால், ஒருவேளை நாம் வெட்கப்பட வேண்டியது வரும். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் (எபி. 3:15). கர்த்தருடைய ஜனங்கள் உங்களுடைய இருதயங்களை ஒருபோதும் கடினப்படுத்தக் கூடாது. பாவங்களை விட்டு விலகி, மனந்திருப்பி, இரட்சிக்கப்படு என்று கர்த்தர் உங்களோடு பேசினால் உடனடியாக கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவது நல்லது. நீங்கள் செய்கிற காரியங்கள் தவறு, வழிகள் தவறு என்று கர்த்தர் உணர்த்தினால் உடனடியாக விட்டுவிடுவது நல்லது. கர்த்தர் நம்மை உணர்த்தும் போது, அவரை வேதனைப் படுத்துகிற  எல்லாக் காரியங்களையும் விட்டு விலகுவது உங்களுக்கு நல்லது. இயேசு பிதாவாகிய தேவனுக்கு எப்பொழுதும் செவி கொடுத்தது போல, கர்த்தருடைய பிள்ளைகள் இயேசுவுக்குச் செவி கொடுக்கவேண்டும்.  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத்தேயு 7:24,25). இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கும் போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *