ஏல் பிராசீம் – திருப்புமுனைகளின் தேவன் (“El Perazim – The God of Breakthroughs”)

தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான் (2 சாமு. 5:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vqkAobu4Ygw

கடந்த நாட்களில் நேபாளம்; தேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் உண்டான அழிவு அனைவருடைய இருதயத்தையும் பாதித்தது, காணொளிகள் மூலம் பார்க்கும் போது தண்ணீரின் வேகத்தையும், ஆக்ரோஷத்தையும் பார்ப்பவர்கள் இருதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வேகமாய்க்  காணப்பட்டது. இயற்கையினால் இப்படிப்பட்ட அழிவுகள் இனி வராதபடிக்கு கர்த்தருடைய பிள்ளைகள் தேசங்களின் குடிகளுக்காகத் திறப்பில் நின்று ஜெபிக்க வேண்டும்.   இப்படிப்பட்ட காரியங்களைப் பார்க்கும்போது நல்ல சமாரியன் இயேசுவைப் போலப் பட்சபாதம் இல்லாதபடி உதவுவதற்கு உங்கள் கரங்களை நீட்டுங்கள். நம்முடைய தேவனுடைய பெயர்களில் ஒன்று ஏல் பிராசீம் என்பதாய்க் காணப்படுகிறது. பிராசீம் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் ஒரு நதியைப் போல வேகமாகப் பாய்ந்து வருதல், வெடித்துப் புறப்படுதல், தடைகளை அடித்துச் செல்லுதல் என்பதாய்க் காணப்படுகிறது. 

தாவீது நாற்பது வருஷங்கள் முழு இஸ்ரவேல் தேசத்தின் மீது ராஜாவாய்க் காணப்பட்டான். முதலில் யூதாவின் மேல் எப்ரோனை மையப்படுத்தி ஏழு வருஷம் அரசாட்சி செய்தான். அவ்வேளையில் மற்ற இஸ்ரவேல்  கோத்திரங்களைச் சேர்ந்தவர்களும் வந்து நாங்களும் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள், எங்கள் மேலும்  ராஜாவாயிரும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆகையால் முழு இஸ்ரவேல் தேசத்தின் மீதும் தாவீது ராஜாவாய் மாறினான். இந்தச் செய்தியை பெலிஸ்தியர்  கேள்விப்பட்ட உடனே, தாவீதோடு யுத்தம் செய்து அவனைப் பிடிக்கும் படிக்கு வந்தார்கள். தாவீது தேவனோடு விசாரித்தான், நான் பெலிஸ்தியரோடு  யுத்தத்திற்குப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று விசாரித்த போது, கர்த்தர் நீ போ, பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புக் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். தாவீது பெலிஸ்தியரோடு யுத்தம் செய்து அவர்களை முறிய அடித்து, தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்று பேரிட்டான். இவ்விடத்தில் பாகால் என்ற வார்த்தைக்கு எஜமான், ஆண்டவர் என்று அர்த்தம்.

கர்த்தருடைய பிள்ளைகளே, இயேசு, உங்கள் வாழ்க்கையில் ஏல் பிராசீம் ஆக வெளிப்பட்டு, நீங்கள் எதிர்கொள்ளுகிற தடைகளையும், உங்களைக்குறித்த சத்துருவின் சதித்திட்டங்களையும், துன்மார்க்கர்களுடைய   கண்ணிகளையும் முழுமையுமாய் அகற்றி,   உங்களுக்கு முன்பாக உடைத்து ஓடும் படிக்குச் செய்து, உங்களுக்குப் பாதை உண்டாக்கி, உங்களை வெற்றிச் சிறக்கச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *