நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் பிழைக்கிற படியினால் நீங்கள் பிழைப்பீர்கள். (யோவான் 14:18,19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-Jh4N79Z1hs
இயேசு, சிலுவையில் நமக்காகத் தன் ஜீவனைக் கொடுப்பதற்கு முன்பு, சீஷர்களோடு பஸ்காவை ஆசரிக்கிற வேளையில், அவர்களுக்கு அவர் கடைசியாகக் கொடுத்த உபதேசத்தை மேல் வீட்டறை உபதேசம் என்று கூறுகிறோம். அது யோவான் 13ம் அதிகாரம் முதல் 17ம் அதிகாரம் வரையில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்குப் பின்பு அவர் கெதரோன் ன்னும் ஆற்றைக் கடந்து கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார் என்று யோவான் 18:1 கூறுகிறது, அங்கே அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார். மேல்வீட்டறை உபதேசத்தில் இயேசு அனேக வாக்குத்தத்தங்களை சீஷர்களுக்குக் கொடுத்தார். அவைகள் எல்லாம் ஆண்டவருடைய சீஷர்களாய், பிள்ளைகளாய் காணப்படுகிற நமக்கும் உரியவையாய் காணப்படுகிறது. குறிப்பாக, ஒரு புதிய மாதத்திற்குள்ளாகப் பிரவேசிக்கிற நமக்கு அவைகள் மிகவும் ஆசீர்வாதமாகக் காணப்படுகிறது.
ஆண்டவர் நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் என்று வாக்குக் கொடுத்தார். திக்கற்றவர்கள், அனாதைகள் என்று யாரை நாம் அழைக்கிறோம்? தாய், தகப்பனை இழந்தவர்களை பொதுவாக அவ்வாறு அழைப்பது வழக்கம். இயேசு, அவர் சிலுவையில் மரித்தாலும், அவர் உயிர்த்தெழுந்து, சதாகாலமும் உயிரோடிருக்கப் போகிறார். கிறிஸ்துவின் ஆவி, ஆவியானவராய் என்றென்றைக்கும் நம்மோடு காணப்படப் போகிறார். அவருடைய பிரசன்னமும் சமூகமும் நம்மை விட்டு விலகாமல் எப்பொழுதும் நம்மோடு காணப்படும். அவர் ஒரு தகப்பனைப் போல எல்லாவற்றையும் குறித்து நமக்குப் போதிப்பார், நம்முடைய பெற்றோரைப் போல எல்லாத் தேவைகளையும் அவர் சந்திப்பார், அவர் நம்மைப் பாதுகாக்கிறவராகவும், ஆதரிக்கிறவராகவும் காணப்படுவார். ஆகையால் தான் கர்த்தருடைய ஜனங்கள் ஒரு போதும் திக்கற்றவர்களாய், அனாதைகளாய் காணப்படுவதில்லை.
நான் உங்களிடத்தில் வருவேன் என்றும் கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். உலகப் பெற்றோர்கள் கூட எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மிடத்தில் வந்து நம்மோடு காணப்படமுடியாது. யுத்தக் காலங்களிலும், கடினமான நேரங்களிலும் அவர்கள் பிரயாணம் செய்து, நம்மிடத்தில் வந்து, நம்மோடு தங்கியிருக்கமுடியாது. ஆனால் இயேசு நீங்கள் கூப்பிடும் போதெல்லாம் உதவி செய்வதற்கு தீவிரித்து வருகிறவர். என்னை நோக்கிக் கூப்பிடு என்று வாக்களித்தவரை, நீங்கள் எந்த வேளையில் கூப்பிட்டாலும் உடனடியாய் வந்து உதவிசெய்வார். அவர் உங்கள் கூப்பிடுதலைக் கேட்பதற்கு ஆவலாய் காணப்படுகிறார். அது மாத்திரமல்ல, அவர் பிழைத்திருக்கிறபடியால் நீங்களும் பிழைப்பீர்கள் என்றும் வாக்குக் கொடுக்கிறார். மரித்தவர், உயிர்த்தெழுந்து, சதாகாலமும் உயிரோடிருக்கிறபடியால், நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள், ஆசீர்வாதமாயிருப்பீர்கள். யோபு, கடினமான வேளையில் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று கண்டு, அவ்வாறு அறிக்கையிட்டான். கர்த்தர் அவனை இரண்டு மடங்கு ஆசீர்வதித்துக் கனப்படுத்தினார். அதுபோல, நீங்களும் இயேசுவை பிழைத்திருக்கிறவராயும், உயிரோடிருக்கிறவராயும் இந்தக் கடினமான நாட்களில் காணும் போது, கர்த்தர் உங்களையும் இந்தப் புதிய மாதத்தில் ஆசீர்வதித்து, இரட்டிப்பான நன்மைகளைத் தந்து, இடங்கொண்டு பெருகும்படிக்குச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

