உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிறார் (The Most High rules over all kingdoms on earth).

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள்  உம்முடைய பேரில்கடந்துபோகவேண்டும் (தானி. 4:25).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LpvgRkrGa8w

அனேக தலைவர்கள் தேசங்களை ஆளுகிறவர்களாக பூமியில்   காணப்பட்டாலும், உன்னதமான தேவன் அவர்களுக்க மேலாக ஆளுகை செய்கிறவராக இருக்கிறார். ஜனங்களை விசாரிப்பதற்கு அனேக அதிகாரிகள் அதிகாரத்திலிருந்தாலும், அவர்களுக்கு மேலாக அதிகாரம் செலுத்துகிறவர் கர்த்தர். உங்கள் வேலை ஸ்தலங்களில் உங்கள் மேல் அனேகர் அதிகாரம் செலுத்தினாலும், அவர்கள் மேல் அதிகாரம் செலுத்துகிறவராகவும்  நம்முடைய கர்த்தர் காணப்படுகிறார். அவருடைய ஆளுகை மட்டும் தலைமுறை தலைமுறையாக நிற்கும். கர்த்தர் தனக்குச் சித்தமானவனுக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும் கொஞ்ச நாட்களுக்குக் கொடுக்கிறார், ஒருவனும் எந்நாளும் அரசாட்சியிலும், ஆளுகையிலும் காணப்படுவதில்லை. ஆனால் தனக்கு மேல் அதிகாரம் செலுத்துகிற ஒருவர் உண்டு என்பதை மனுஷன் உணராமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கொஞ்ச நாட்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செய்கிற அட்டூழியங்களும், அநியாயங்களும் அனேகம். குறிப்பாகக் கீழ் தேசங்களில் ஆளுகையிலிருக்கிறவர்களும், அதிகாரிகளும், ஏழை ஜனங்களுக்கு விரோதமாகவும், கர்த்தருடைய ஜனங்களுக்கும், சபைகளுக்கும், ஊழியர்களுக்கும் விரோதமாகச் செய்கிற காரியங்கள் அதிகமாய்க் காணப்படுகிறது.

உன்னதமான தேவன் மனுஷனுடைய ராஜ்யத்தில் ஆளுகைச் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் படிக்குக் கர்த்தர் உணர வைத்த நபர்களில் நேபுகாத்நேச்சாரும் ஒருவன். அவன் பாபிலோனியச்  சாம்ராஜ்யத்தை ஆளுகிறவனாய், சர்வ அதிகாரமுடையவனாய் காணப்பட்டான். எந்நாளும் நான்தான் ஆளுகையில் காணப்படுவேன் என்ற சிந்தையும் அவனுக்குள் காணப்பட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று எபிரேய வாலிபர்கள் அவன் நிறுத்தின பொற்சிலையைப்  பணிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்தவுடன், உங்களை என் கைக்கு தப்புவிக்கப் போகிற தேவன் யார் என்று கர்ச்சித்தான். அவனுடைய அதிகாரத்திற்கு மேலாக ஒருவரும் இல்லை என்பதாக நினைத்தான். அவனுடைய இருதயம் மேட்டிமையினால் நிறைந்திருந்தது. ஆகையால் மனுஷனுடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்கிற கர்த்தர், அவனை மனுஷர்களிடத்திலிருந்து தள்ளி, மிருகங்களோடு சஞ்சரிக்கும் படிக்குச் செய்து, மாடுகளைப் போலப் புல்லைத் தின்னும் படிக்குச் செய்து, அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவனை ஏழுவருஷங்கள் ஆகாயத்துப் பனியிலே  நனையும் படிக்குச் செய்தார். இந்நாட்களிலும் கூட தங்கள் அதிகாரங்களை இருதய கர்வத்தினால் துஷ்பிரயோகம் செய்து, தங்களைக் கேட்பதற்கு யாருமில்லை என்ற கருதுகிற ஒவ்வொரு தலைவர்களையும், அதிகாரிகளையும், நியாயத்தைப் புரட்டுகிறவர்களையும் கர்த்தர் அப்படியே செய்வார்.

நேபுகாத்நேச்சார், ஏழு வருஷங்கள் கழிந்தபின்பு அவனுக்குப் புத்தி தெளிந்தது, கர்த்தருடைய வல்லமையை உணர்ந்தான். கர்த்தருடைய  கர்த்தத்துவமே  நித்திய கர்த்தத்துவம் என்றும், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும் என்பதையும் அறிந்து கொண்டான்.  அதோடு, பூமியின் குடிகளும் அவர்களுடைய அதிகாரங்களும் ஒன்றுமில்லை என்றும், கர்த்தருடைய கரத்தை தடுத்து, நீர் என்ன செய்கிறீர் என்று சொல்லத்தக்கவன் ஒருவனுமில்லை என்பதையும் புரிந்துகொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை உங்கள் மேல் அனேகர் ஆளுகைச் செய்யலாம், பட்சபாதத்தோடு நடத்தலாம், ஊழியங்களுக்குத் தடைகளைப் போடலாம். கர்த்தர் தம்முடைய அதிகாரமும், ஆளுகையுமே நித்தியமானது என்பதை அப்படிப்பட்டவர்கள் புரியும்படிக்கு துரிதமாய்ச் செய்வார். தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல அவர்களை உங்களுக்கு முன்பு ஓடும் படிக்குச் செய்வார். அன்று எசேக்கியா ராஜாவுக்கு விரோதமாய் வந்த சனகெரிப் செத்த முகத்தோடு திருப்பிப் போனது போல, உங்கள் எதிரிகளை உங்களுக்கு முன்பாக தாழ்த்துவார். உங்கள்  காரியங்கள் ஜெயமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar