மதிலும் வாசல்களும் ( Wall and Gates )

வெளி 21 : 12 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hr4M1c0_-Qk

ஒரு பட்டணத்தின் பெயரை சொன்னால் அந்த பட்டணத்தின் பெருமையை சொல்லிவிடுவோம். உதாரணத்திற்கு திண்டுக்கல் என்றால் பூட்டு என்றும், சேலம் என்றால் மாம்பழம் என்றும், திருநெல்வேலி என்றால் அல்வா என்றும் சொல்லுவார்கள். குறிப்பிட்ட பட்டணத்தில் பிரமாண்டமான கோவில்கள், அரண்மனைகள் உண்டு என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமை வர்ணிக்கும்போது குறிப்பாக முதன்முதலில் வருவது பெரிதும் உயரமுமான மதில் இருப்பதை ஆவியானவர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார். எருசலேமை சுற்றிலும் சிறிய அளவினால் அல்ல, உயரமான மதில்சுவர் காணப்படுகிறது. யாரும் எளிதாக எருசலேம் பரிசுத்த நகரத்திற்குள்ளே வந்துவிடமுடியாது. ஜீவனுக்கு போகும் வாசல் குறுகியதாகத்தான் காணப்படும். ஆனால் இன்றைய பல ஊழியக்காரர்களோ மதில்சுவரை குட்டி சுவராக கட்டி, ஜனங்கள் அதற்குள் எளிதாக தாவி வரும்படி செய்கிறார்கள். எப்படியும் வாழலாம் என்றும், கிருபையை போக்கடிக்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் மதில் சுவர் பெரிதும் உயரமாய் காணப்படவேண்டும். மதில் என்பது உலகத்தையும் பரிசுத்த நகரத்தையும் பிரிக்கும் சுவராய் காணப்படுகிறது. அதுபோல உங்கள் வாழ்க்கையில் உலகம் உள்ளே வந்துவிடாமல், உலக பழக்க வழக்கங்கள், சிற்றின்பங்கள், சீர்கேடுகள், பரிசுத்த குலைச்சல்கள், பாரம்பரியங்கள் வந்துவிட அனுமதிக்காமல் உங்கள் மதில் பெரிதும் உயரமாக காணப்படவேண்டும்.

எருசலேம் பரிசுத்த நகரத்திற்கு 12 வாசல்கள் இருக்கிறது. இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய் என்று ஏசாயா 60 : 18 ல் சொல்லியிருப்பதை பாருங்கள். மதில்கள் என்பது உலகம் கடந்துவிடாமல் காக்கும் இரட்சிப்பு. அதுபோல வாசல்கள் என்பது துதி என்று வசனம் கூறுகிறது. எருசலேமை சுற்றிலும் பன்னிரண்டு வாசல்கள் இருப்பதைப்போல, நம்முடைய வாழ்வில் பன்னிரண்டு பக்கங்களிலும் துதியென்னும் சத்தம் எழும்பிக்கொண்டே காணப்படவேண்டும். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள் (சங் 100 : 4) என்று சங்கீதக்காரனும் இதை ஓங்கி கூறுகிறான். ஆகையால் நம்முடைய வாழ்வில் பெரிதும் உயரமான மதிலும், எப்பக்கமும் துதி என்னும் வாசல்களும் நிறைந்து காணப்படட்டும். இந்த பூவுலகில் புதிய எருசலேமின் முன்சுவையை அனுபவிக்கிறவர்களாய் காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org