முழங்காற்படியிட்டு ஜெபிக்கும் தலைவன் ( A leader who prays on his knees)

தானி 6 :10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qW8KUdWM_fU

இன்றைக்கு அநேக விசுவாசிகள் மனிதர்களையே நம்பி வாழ்ந்து வாழ்க்கையில் தோல்வியைச் சந்திப்பதற்கு காரணம், அவர்கள் கர்த்தருக்கு முன்பாக விழாமல் இருப்பதாலேயே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். யாரை பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? மனிதர்களையா ? இல்லை தேவனையா? தேவனைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறேன் என்று சொல்லுவீர்களென்றால், நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் கர்த்தருக்கு முன்பாக மிகவும் இலகுவாக விழுந்துவிடுவீர்கள்.

ஒரு காலத்தில் ஆசீர்வாதத்திற்காகக் காத்திருக்கும்போதும், ஒரு நன்மை என் வாழ்க்கையில் நடைபெறாதா என்று எண்ணியிருந்தபோதும், கர்த்தரின் பாதத்தில் விழுந்துகிடந்தவர்கள், ஆண்டவர் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்திய பிறகு, கர்த்தருக்கு முன்பாக விழுந்துகிடக்க மேட்டிமைகளும் பெருமைகளும் அவர்களை தடைசெய்கிறதாய் காணப்படுகிறது. தானியேலை பாருங்கள். அவன் அடிமையாக இருந்தபோது முழங்காற்படியிட்டு கர்த்தருக்கு முன்பாக ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். ஆகையால் தானியேலுக்குள்ளாக விசேஷித்த ஆவி காணப்பட்டது. கர்த்தர் அவனைத் தேசத்திற்கே கவர்னராக உயர்த்தினார். இப்பொழுது நான் கவர்னர், ஆகையால் ஜனங்கள் தான் எனக்கு முன்பாக பணிய வேண்டும், ஜனங்கள் தான் என்னைச் சார்ந்திருக்க வேண்டும் என்று தானியேல் நினைக்கவில்லை. அவன் தலைவனாகப் பொறுப்பேற்ற பிறகும், தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

மோசேயும் ஆரோனும் கூடத் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள் என்று லேவி 9:23 கூறுகிறது. அவர்கள் முதலாவது ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள். அதாவது, தேவனுக்கு முன்பாகப் போய் நின்று ஜெபித்தார்கள். அதன் பின்புதான் வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ‘ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?’ என்று யாத் 5:22-ல் ஜனங்கள் மீது பார்வோன் கொடூரமாக இருந்தபோது கர்த்தரிடத்தில் திரும்பினான். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று என்று யாத் 15:25-ல் மாராவின் தண்ணீரை குடிக்க முடியாதபோதும் கர்த்தர் பக்கம் திரும்பினான். நல்ல தலைவர்களாக இருக்க விரும்பும் விசுவாசிகள் ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக விழுந்துகிடக்கிறவர்களாய் காணப்பட வேண்டும். கர்த்தருக்கு முன்பாக விழுந்துகிடக்கிறவன், மனிதனுக்கு முன்பாகத் தலைநிமிர்ந்து நிற்பான். கர்த்தருக்கு முன்பாக விழாதவன், மனிதனுக்கு முன்பாக விழுவான். தானியேலைபோல மோசேயை போல தலைவர்களாக இருந்தாலும் கர்த்தருக்கு முன்பாக விழுந்துவிடுங்கள். கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *