மழையில்லாத மேகம் ( Clouds without rain )

நீதி 25 : 14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RxXYRkf9rQA

விவசாயம் செய்கிறவர்கள் மாத்திரமல்ல, பொதுவாக அநேகர் மேகத்தைப் பார்த்து மழை வருமா வராதா என்று ஓரளவிற்கு கணித்துவிடுவார்கள். சில சந்தர்ப்பங்களில் மேகத்தைப் பார்த்து மழை வரும் என்று நினைக்கும்போது, மழை வராமலேயே மேகம் கடந்து சென்றுவிடும். வானிலையைக் கணிக்கும் நிறுவனங்களும் கூட இந்த விஷயத்தில் தவறுவதுண்டு. அதுபோலத்தான் சிலர் ‘நான் உனக்கு உதவி செய்கிறேன்’ என்று சொல்லியும், அந்த நபருக்கு உதவி செய்யாமல் தன் கைகளை மூடிக்கொள்கிறார்கள். இது சாதாரண மக்களுக்கு மாத்திரமல்ல ஊழியக்காரர்களுக்கும் பொருந்தும்.

உண்மையில் குணமாக்கும் வரம் இல்லாதவர்கள் கூட, தங்களுக்கு அந்த வரம் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், “அவர்களுடைய கனிகளை வைத்தே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு கூறினார். ஒருவருக்குக் குணமாக்கும் வரம் இருப்பதற்கான ஆதாரம் என்னவென்றால், அவர் நோயாளிகளுக்காக ஜெபிக்கும்போது அவர்கள் குணமடைவதே ஆகும். ஒருவர் நோயாளிகளுக்காக ஜெபித்தும் அவர்கள் குணமடையவில்லை என்றால், அவரிடம் அந்த வரம் இல்லை என்று அர்த்தம். வரங்கள் குறித்துப் பொய்யான பெருமை பேசுதல் பெருமளவில் இந்நாட்களில் காணப்படுகிறது. அப்படிப்பட்ட ஊழியக்காரர்களும் கூட மழையற்ற மேகத்தைப் போன்றவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பல மாதங்களாக மழையின்றி வறண்டுபோன ஒரு நிலப்பகுதியின் மீது கார்மேகங்கள் வருவதைக் காணலாம். “கடைசியாக மழை வரப்போகிறது!” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் காத்திருந்த பிறகு, அந்த மேகங்கள் அப்படியே கடந்து சென்றுவிடுகின்றன, மழையே பொழிவதில்லை. அது ஏமாற்றத்தை அளிக்கிறது. குணமாக்கும் கூட்டங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் பார்க்க முடிகிறது. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகிறார்கள், ஆனால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

நம்மால் செய்ய முடியாத காரியத்தை, “என்னால் இதைச் செய்ய முடியாது” என்று கூறிவிடுவது நல்லது. நேர்மையாகவும் தாழ்மையாகவும் இருங்கள்: “சகோதரரே, என்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லை; ஆனால் தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று என்னால் ஜெபிக்க முடியும்” என்று சொல்லுங்கள்.

மாத்திரமல்ல, நம் பிள்ளைகள் செய்த ஒரு காரியத்திற்காக அவர்களுக்குப் பரிசளிப்பதாக நாம் வாக்களித்தால், அந்த வாக்கைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். ஒன்றை வாக்களித்துவிட்டு, அதற்கான நேரம் வரும்போது பின்வாங்கி, வாக்கைக் காப்பாற்றாமல் இருப்பது தவறாகும். அத்தகைய சூழ்நிலைகளில் வாக்குறுதி அளிக்காமலே இருப்பதே மிகச் சிறந்தது. வாக்கு கொடுத்தும் அதை நிறைவேற்றாமல் இருப்பீர்களென்றால், நீங்கள் மழையற்ற மேகத்திற்கு ஒப்பானவர்கள்.

நம்முடைய ஆண்டவர் வாக்கு கொடுத்ததை நிறைவேற்ற வல்லமையுள்ளவர். ஆசீர்வாத மழை உங்கள் வாழ்க்கையில் பெய்யும் என்று சொன்னால், அதை அப்படியே நிறைவேற்றுவார். பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொன்னால், அப்படியே பெருமழை தேசங்களில் பெய்யும். அவர் சொன்னதை நிறைவேற்றுபவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் கூட இயேசுவைப் போல பிறருக்கு ஏதாவது கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்தால், சொன்னதைச் செய்யத் தவறாமல் இருங்கள். மழையற்ற மேகங்களைப் போலக் காணப்பட வேண்டாம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *