யோவே 1 : 12 திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/MIL4hOTMBnk
இயேசு ஒருமுறை அத்திமரத்தில் ஏதாவது பழம் இருக்குமா என்று பார்த்தபோது, அவை கனி தரவில்லை என்பதால் அந்த மரத்தைச் சபித்தார். ஒரு மனிதன் கனிதராத வாழ்க்கை வாழ்ந்தால், அவன் பின்மாற்றமடைந்த வாழ்க்கை வாழ்கிறான் என்று அர்த்தம். தங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை எங்கேயோ தொலைத்தவர்கள், பின்மாற்றக்காரர்கள் என்று ஒரு மூத்த ஊழியக்காரர் கூறினார். “திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது”. இது இஸ்ரவேலின் வீழ்ச்சியின் தொடக்கமாக இருந்தது. இப்படி வாழ்க்கையே காய்ந்துபோன திராட்சச்செடியைப் போலவும், வாடிப்போன அத்திமரத்தைப் போலவும் இருக்கிறதே என்று கவலையோடு காணப்படாதிருங்கள். காரணம், கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (2:21). உங்களை மீண்டும் எடுத்து கட்டுவார். அவர் உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்தபிறகு என்ன நடக்கும்? யோவேல் 2:22-ல் நாம் மேலும் வாசிக்கிறோம்: வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும் என்பதாக. “கர்த்தர் அந்த வேலையைச் செய்து முடித்த பிறகு, அத்திமரமும் திராட்சைக்கொடியும் முழுமையான பலனைத் தருகின்றன”. வாடிப்போன அந்த அத்திமரம் மீண்டும் துளிர்க்கத் தொடங்குகிறது. உங்கள் வாழ்க்கையும் மீண்டும் துளிர்க்கும். மேலும் கர்த்தர் யோவேல் 2:25-ல் கூறுகிறார், நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் என்பதாக.
ஆகையால் தொலைந்து போன உங்கள் சந்தோஷத்தை கர்த்தர் மீண்டும் தருவார். யோவேல் 1:13-ல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து பணிவிடைக்காரர்கள் என்றும், தேவனுடைய தொண்டர்கள் என்றும் அழைக்கிறார். நாம் அனைவரும் அரசியல்வாதிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும் தொண்டர்கள் அல்ல; நாம் தேவனுடைய தொண்டர்கள். தொண்டர்களாகிய நாம் தேசத்தில் உள்ள ஜனங்களுடைய வாழ்க்கையில் சந்தோசம் உண்டாக என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் கர்த்தர் யோவேல் 1:14-ல் கூறுகிறார். பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச் செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் என்று கர்த்தர் கூறுகிறார். அப்பொழுது கர்த்தர் நம்முடைய தேசங்களில் சந்தோசத்தை தொலைத்த ஜனங்களை திரும்ப உயிர்ப்பித்து, அவர்கள் வாழ்க்கையை மீண்டும் எடுத்துக்காட்டுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

