கர்த்தர் உங்களுக்குப் பெலனையும், சமாதானத்தையும் அருளுவார் (The LORD will give you strength and peace)

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் (சங். 29:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/D4nxXy86aMc

ஒரு புதிய மாதத்திற்குள் கர்த்தர் கிருபையாய் நம்மை அழைத்துக் கொண்டு வந்தார். நம்மைச் சுற்றி நடக்கிற யுத்தங்களையும், ஆபத்துகளையும் பார்க்கும் போது ஒவ்வொரு புதிய நாளும் கர்த்தருடைய கிருபை என்பதைப் புரிந்துகொண்டு அவருக்குத் துதி, ஸ்தோத்திரங்களை ஏறெடுங்கள்.

மேற்குறிப்பிட்ட வசனம் கர்த்தர் அவருடைய ஜனங்களுக்கு என்று வைத்திருக்கிற இரண்டு ஆசீர்வாதங்களைக் குறித்துக் கூறுகிறது. கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலனையும் சமாதானத்தையும் அருளுகிறவர். ஆண்டவர் இலவசமாய் வைத்திருக்கிற இரட்சிப்பைத் தவிர மற்றவை எல்லாம் நிபந்தனைகளோடு கூடிய ஆசீர்வாதமாய் காணப்படுகிறது. இரட்சிப்பை நமக்கு இலவசமாய் அருளுவதற்கு, கல்வாரிச் சிலுவையில் ஆண்டவர் தன்னுடைய இரத்தத்தைக் கிரயமாய் ஊற்றிக் கொடுத்திருக்கிறார். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் இயேசுவை சிலுவையில் ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவன், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி என்று ரோமர் 8:32 கூறுகிறது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்று யாக். 1:7ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் பரம பிதா உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தந்து வாழவைப்பதற்கு ஆவலாய் காணப்படுகிறார்.

29ம் சங்கீதத்தில் கர்த்தருடைய சந்தத்தைக் குறித்து அதிகமாக எழுதப்பட்டுள்ளது. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது என்றும், வல்லமையுள்ளது என்றும்,  மகத்துவமுள்ளது என்றும், கேதுரு மரங்களை முறிக்கிறது என்றும், அக்கினி ஜ{வாலைகளைப் பிளக்கும் என்றும், வனாந்தரத்தை அதிரப்பண்ணும் என்றும், பெண்மான்களை ஈனும்படி செய்யும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய சத்தத்தைக் கேட்டு, கீழ்ப்படிந்து வாழ்பவர்களுக்குக் கர்த்தர் பெலனையும், சமாதானத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பார். என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்பதற்கு நேராக உங்கள் செவிகள் திருப்பப்பட்டிருக்கிறதா? வசனம் உங்களோடு பேசுகிறதா? பிரசங்கங்களும், உபதேசங்களும், பாடல்களும் உங்களோடு இடைப்படுகிறதா? இந்நாட்களில் முழு உலகமும் சமூக ஊடகங்களில் மூழ்கிப் போய்க் காணப்படுவதினால் கர்த்தர் பேசுகிற சத்தத்தைக் கேட்கக் கூடாத கிறிஸ்தவர்கள் அனேகராய்க் காணப்படுகிறார்கள்.

நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்கும் போது, கர்த்தர் உங்களுக்குப் பெலன் அருளுவார், உன்னதத்தின் பெலன்   உங்கள் மேல் நிழலிடும். கழுகுக்கொத்த, காண்டாமிகத்திற்கொத்த பெலனைக் கர்த்தர் உங்களுக்கு அருளிச் செய்வார். அந்தப் பெலன் புதிய மாதம் முழுவதும் உங்களை ஜெயமாய் நடத்தும். நீங்கள் நோயற்ற சுகவாழ்வு வாழ்வீர்கள். அதுபோல கர்த்தருடைய சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். எல்லா ஆசீர்வாதங்களையும் விட மேலான ஆசீர்வாதம் கர்த்தருடைய சமாதானமாய்க் காணப்படுகிறது. தேவனுடைய நாமங்களில் ஒன்று யெகோவா ஷாலோம் என்பது,  ஷாலோம் என்ற கர்த்தருடைய நாமத்திற்குள்ளாய் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்திற்கு வேண்டிய எல்லா நன்மைகளும் அடங்கியிருக்கிறது. நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கர்த்தர் அனைத்து நன்மைகளையும் தந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *