நீதி 26 : 17 வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bLSJX5HWViY
கிராமப்புறங்களில் விவசாயிகள் பொதுவாக ஆடு, மாடு, கோழி மற்றும் நாய் போன்ற பிராணிகளை வளர்ப்பார்கள். சும்மா நிற்கும் ஆட்டின் காதைப் போய் பிடித்து இழுத்தால், ஒருவேளை நாம் தப்பித்துக்கொள்ளலாம். கோழியின் காதை பிடித்து இழுத்தாலும் தப்பித்துக்கொள்ளலாம், ஒருவேளை மாட்டின் காதைப் பிடித்து இழுத்தாலும் தப்பித்துக்கொள்ளலாம். அதேவேளையில், வாயில்லாத பிராணி என்றெண்ணி சும்மா நிற்கும் தெரு நாயின் காதைப் போய் பிடித்து இழுத்தால், அது கடித்ததினிமித்தம் நாம் மருத்துவமனையில் சாதாரண வார்டுக்குப் போகாமல், அவசரப் பிரிவு சிகிச்சைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதுபோலத்தான் அநேகர் தேவையில்லாத காரியத்தில் தன் தலையை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்கள். இதன் அடிப்படைப் பொருள் என்னவென்றால், 1 பேதுரு 4:15-ல் பேதுரு கூறியது போல, மற்றவர்களின் விஷயங்களில் தேவையற்ற தலையீடு செய்பவராக இருக்கக்கூடாது என்பதே. உங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு வாக்குவாதம் அல்லது இருவருக்கு இடையிலான ஒரு பிரச்சனை நடக்கும்போது, அதில் தலையிடாதீர்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடத் துடிப்பது என்பது, தெருவின் மறுபுறம் நடந்து செல்லும் ஒரு நாயைப் பார்த்து, சாலையைக் கடந்து சென்று அதன் காதுகளைப் பிடித்து இழுக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைப் போன்றது. அவர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்தால், நீங்கள் அதில் தலையிடலாம். ஆனால் அவர்கள் உதவி கேட்காத நிலையில், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயலும்போது, நீங்கள் அதில் தலையிடத் தேவையில்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? அந்த நாய் திரும்பி உங்களைக் கடித்துவிடும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் என்ற உந்துதலால், தேவையற்ற துன்பங்களையும் சிக்கல்களையும் சந்திக்கும் விசுவாசிகள் பலர் உள்ளனர். நாம்தான் நிபுணர்கள், நாம்தான் சமாதானம் செய்பவர்கள், நாம்தான் ஞானம் மிக்கவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது. தேவையற்ற காரியத்தில் தலையிடுவது முட்டாள்தனமானது என்று ஞானி கூறுகிறார். இதுவும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஞானம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் என்று பிர 10:8 கூறுகிறது. மற்றவர்கள் போடும் சண்டையில் நீங்களே போய் தலையை கொடுப்பது, உங்களுக்கு நீங்களே படுகுழியை வெட்டுவதற்குச் சமம். ஆகையால் வீணான காரியங்களில் உங்களை பாரப்படுத்திக்கொள்ளாமல், ஆண்டவரிடம் இப்படிப்பட்ட வேண்டாத காரியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

