பெருமூச்சுவிட்டழு (Grieve and lament).

கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய்,    அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும்  பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார் (எசேக். 9:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/t5pdkKHtBYQ

கர்த்தருடைய கண்கள்,    ஜனங்களுடைய அருவருப்பையும் பாவத்தையும் கண்டு,    அவர்களுக்காகப்  பெருமூச்சு விட்டழுகிற  ஜனங்களைத் தேடுகிறது.   கர்த்தர் ஒரு நாள் எசேக்கியேலை நோக்கி,      மனுபுத்திரனே,    எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல்  புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்,    அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.  அவர்கள் கடின முகமும் முரட்டாட்ட இருதயமுள்ள புத்திரர்,    அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்,    கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை  உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி,    கேளாவிட்டாலும் சரி,    தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும் என்பதாக  கூறினார். அவனுடைய சமகாலத்தில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசியும் என் தலை தண்ணீரும்,    என் கண்கள் கண்ணீரூற்றுமானால்  நலமாயிருக்கும்,    அப்பொழுது என் ஜனங்களுக்காக இரவும் பகலும் அழுவேன் என்று புலம்புகிறவனாய் காணப்பட்டான். இவர்கள் இருவருடைய சமகாலத்தில் வாழ்ந்த தானியேல் தீர்க்கதரிசியும் கூட உபவாசம் பண்ணி,    இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து,    தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட அவன் முகத்தைக் கர்த்தருக்கு நேராக்கி,    அவரை நோக்கி ஜெபம் பண்ணி,    பாவஅறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே,    உம்மில் அன்புகூர்ந்து,    உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு  உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,     நாங்கள்  பாவஞ்செய்து,     அக்கிரமக்காரராயிருந்து,    துன்மார்க்கமாய் நடந்து,    கலகம் பண்ணி,    உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்,    ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு என்று அழுது ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான். 


இந்நாட்களில் ஜெபிக்கிற ஜனங்கள் குறைந்துவிட்டார்கள். சபைகளில் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்   செல்லுகிற ஜனங்கள் ஜெபிக்க வர விருப்பமில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். ஜெப பாரம் விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் நடுவில் குறைந்து கொண்டு வருகிறது. இந்நாட்களில் போதக மாநாடுகளும் கூடுகைகளும்,    தாலுக்கா,    மாவட்ட,    மாநில,    தேசிய மற்ற உலக அளவில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால்  ஜெபக்கூடுகைகள் குறைந்துபோய்விட்டது. இயேசு கூறியதைப் போல,    ஒரு மணி நேரம் அவரோடு விழித்திருந்து ஜெபிக்கிறவர்கள் குறைந்து போனார்கள். அந்நாட்களில்  எருசலேம் தேவாலயத்தின் சுவரில் துவாரம் போட்டு உள்ளே காணப்படுகிற நரகலான விக்கிரகங்களையும்,    அவைகளுக்குத்  தூபங்காட்டுகிற இஸ்ரவேல் வம்சத்தாரின் எழுபது மூப்பர்களையும்,    தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகளையும்,    சூரிய நமஸ்காரம் செய்கிற புருஷர்களையும் கர்த்தர் எசேக்கியலுக்கு  காட்டினார்.  இந்நாட்களிலும் சபைகளில் பொருளாசையாகிய விக்கிரக ஆராதனைகளும்,    மாம்சீக இச்சைகளும்,    சமரசம் செய்கிற உபதேசங்களுக்குத் தூபங்காட்டி ஒத்துப் போகிறவர்களும் பெருகி விட்டார்கள். 

பெருமூச்சு விட்டு அழுது ஜெபிக்கிற ஜனங்களுடைய நெற்றிகளில் கர்த்தர் அடையாளத்தைப் போடுகிறார். அவர்களுக்கு என்று கர்த்தர் விஷேசித்த பாதுகாப்பை வைத்திருக்கிறார்.  பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் எகிப்தியர்களுக்கும்  இஸ்ரவேலர்களுக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணினதைப் போல,    சிகப்பு கயிறு ராகாபின் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ணினது போல,    ஜெபிக்கிறவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம்  உண்டுபண்ணக் கர்த்தர் நெற்றியில் அடையாளத்தைப் போடுகிறார். அந்த அடையாளம் உங்களை வாழவைக்கும்,    உங்களை உயர்த்தும். ஜெபிக்க உங்களை இன்றே அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae