தூங்காதவர்(God doesn’t sleep):-

சங் 121:4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/z9TwaJT7mYk

மனிதன் சராசரியாக எட்டு மணிநேரம் தூங்குகிறான். அதுபோல ஊரும் பிராணிகள், விலங்குகள், பறவைகள், கடல் வாழ் ஜீவன்களெல்லாம் சில மணிநேரங்கள் தங்கள் நாளில் தூங்குவதுண்டு. மனிதன் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் சில மணிநேரங்கள் தூங்குவார்கள். ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. எப்பொழுதும் விழித்துக்கொண்டு இருந்து நம்மை பாதுகாக்கிறவர்.

மனிதனுக்கு தூக்கம் தேவை அது கர்த்தர் கொடுத்தது. இயேசுவும் கூட மனுஷ குமாரனாக இருக்கும்போது படகில் தூங்கினார். இது அவர் தூங்கும்போதும் தன்னுடைய பிதாவானவர் தன்னை காத்துக்கொள்வார் என்றும், தன் பிதாவிடம் இருக்கும் தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சி தூங்குபவன் சோம்பேறி, அதற்கு வேதம் நமக்கு இடம் கொடுக்கவில்லை. சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும் (நீதி 6:9-11) என்று வசனம் சொல்லுகிறது. அதிகாலையில் எழுந்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் வேதம் நமக்கு கற்று கொடுக்கிறது.

நாம் சில மணி நேரங்கள் தூங்கி கொண்டிருந்தாலும், நம்மை பாதுகாக்கிற கர்த்தர் தூங்குவதில்லை. இருளில் நடமாடும் கொள்ளைநோய்கள் எல்லாவற்றிற்கும் விலக்கி உங்களை கர்த்தர் பாதுகாப்பார். நாம் விழித்திருக்கும்போது மாத்திரமல்ல, நாம் தூங்கும் போதும் கர்த்தர் தூங்காமல் பாதுகாப்பார். ஆகையால் தான் சங்கீதக்காரன் சொல்லுகிறான் சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் (சங் 4:8). சங்கீதக்காரனுக்கு அநேக பிரச்சனைகளும், போராட்டங்களும் இருந்தது. ஆகிலும் அவனுடைய தூக்கம் இனிமையாக இருந்ததன் காரணம், தன்னை கர்த்தர் தூங்காமல் காத்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையும் விசுவாசமே. அந்த விசுவாசம் உங்களுக்கும் இருக்க வேண்டும். உங்களை பாதுகாக்கும்படியாக அவர் உறங்காமல் தூங்காமல் இருக்கிறார். மாத்திரமல்ல வசனம் சொல்லுகிறது கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா என்பதாக. கர்த்தர் எப்பொழுதும் நகரத்தை விழித்திருந்து பாதுகாகிறார் என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

உங்களை கர்த்தர் எல்லா கொள்ளை நோய்களுக்கும் விலக்கி பாதுகாக்கும்படியாக, எல்லா மறைவான கண்ணிகளுக்கு விலக்கி காக்கும்படியாக, போக்கிலும் வாரத்திலும் காக்கும்படியாக அவர் உறங்காமல் தூங்காமல் இருக்கிறார். ஆகையால் கவலைப்படாதிருங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org