பெரிய காரியங்களும்,     அதிசயங்களும் (Great and Marvellous things).

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,     எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 5:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fVvjtjU112A

நாம் ஆராதிக்கிற தேவன் மகா பெரியவர்,     அவர் சர்வ வல்லமையுள்ளவர்,     அவருடைய செய்கைகள் விவரிக்கமுடியாதது.  யோபுவின் சினேகிதனான தேமானியனாகிய எலிப்பாஸ் கர்த்தரைக் குறித்துக் கூறும் போது,     அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும்,     எண்ணிமுடியாத அதிசயங்களையும்   செய்கிறார் என்றான். யோபுவும் கர்த்தரைக் குறித்து,     அதே வார்த்தைகளை  யோபு 9:10ல் கூறினார். நாம் காண்கிறவை அத்தனையும் அவருடைய வார்த்தையால் உண்டானது. தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்று சொன்னார்,     வெளிச்சம் உண்டானது. அப்படியே ஆகாய விரிவு,     வெட்டாந்தரை,     சுடர்கள்,     ஜீவஜந்துக்கள்,     பறக்கும் பறவைகள் மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். பின்பு தம்முடைய சாயலாக மனுஷனையும் சிருஷ்டித்தார். கர்த்தர் சிருஷ்டித்த நட்சத்திரங்களை மனுஷன் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான்,     அவைகள் காணப்படுகிற தூரத்தையும்,     அவைகளின் எண்ணிக்கையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கீதக்காரன் நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால்,     உம்மைத் துதிப்பேன்,     உமது கிரியைகள் அதிசயமானவைகள்,     அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்,      நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,     பூமியின்  தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது,     என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை,     என் கருவை உம்முடைய கண்கள் கண்டது,     என் அவயவங்களில்  ஒன்றாகிலும்  இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,     அவைகள் உருவேற்படும்  நாட்களும்,     உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்று அவனுடைய சிருஷ்டிப்பின் மேன்மையை விவரித்தான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     தேவன் பெரியவர்,     அவர் உங்களுக்காகப் பெரிய காரியங்களையும்,     அதிசயங்களையும் செய்கிறவர். அவைகள் உங்களுக்கு ஆச்சரியமாகவும்,     அதிசயமாகவும் இருக்கும். இஸ்ரவேல் ஜனங்கள்  வனாந்தரத்தில்  தங்களுடைய அவ்விசுவாசத்தினால் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தினார்கள். அதுபோல தேவனுடைய வல்லமையை ஒருநாளும் நீங்கள் மட்டுப்படுத்தாதிருங்கள். அவரால் எல்லாம் கூடும்,     அவர் சொல்ல ஆகும்,     கட்டளையிட நிற்கும்.  நான் மாம்சமான  யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்,     என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? என்று கேட்கிறார். மனுஷனால் கூடாதவைகள் எல்லாம் தேவனால் கூடும். ஆகையால் உங்கள் தேவைகளை அவரிடம் சொல்லுங்கள்,     உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள். அவர்மேல் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கை ஒருநாளும்  உங்களை  வெட்கப்படுத்துவதில்லை.  கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் பெரியவராய்,     அதிசயம் செய்கிறவராய் துரிதமாய் வெளிப்பட்டு உங்களை மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae