சோர்ந்துபோன யூதாவின் மனிதர்கள்(Discouraged men of Judah).

அப்பொழுது யூதா மனிதர்: சுமை காரரின் பெலன் குறைந்துபோகிறது,     மண்மேடு மிச்சமாயிருக்கிறது,     நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள் (நெகே. 4:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/l3PXq1diIqM

நெகேமியா,     இடிந்து போன எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவதற்கு,     பெர்சியா தேசத்திலிருந்து எருசலேமுக்கு வந்தான். அங்கே காணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி,     எருசலேம்  பாழாயிருக்கிறதையும்,      அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும்,     நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே,     நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு,     எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,     தன் தேவனுடைய கரம் நன்மையாக இருக்கிறதையும்,     ராஜா அவனோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தான்.  அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,     அந்த நல்ல வேலைக்கு கைகளைத் திடப்படுத்தி நெகேமியாவிற்கு தோள்கொடுத்தார்கள். அலங்கத்தைக் கட்டுகிற வேலையானது கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தேறிக்கொண்டு வந்த வேளையில்,     அது எதிரிகளை எரிச்சல் அடையும் படிக்குச் செய்தது. அவர்கள் பலவிதங்களில் தடைகளை உண்டுபண்ணினார்கள்,     கட்டுகிறவர்களுக்கு மனமடிவை உண்டாக்கினார்கள். அந்த வேளையில் இவர்கள் ஜெபம் பண்ணி,     இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்து வேலையைத் தொடர்ந்து செய்தார்கள்.  பல நேரங்களில் கர்த்தருடைய பணி புறஜாதிகளால் பாதிப்படைகிறது. சத்துரு அவர்களைப் பயன்படுத்தி கர்த்தருடைய காரியங்களைத் தடைசெய்ய முயற்சிக்கிறான். ஆகிலும் நாம் ஜெபம்  செய்யும் போது கர்த்தர் நமக்கு ஜெயத்தைக் கொடுப்பார்.

இந்த சூழ்நிலையில்,     சொந்த ஜனங்களாகிய யூதாவின் மனிதர்கள்,     நெகேமியாவை நோக்கி,     சுமை காரரின் பெலன் குறைந்துபோகிறது,     மண்மேடு மிச்சமாயிருக்கிறது,     நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்று திடீரென்று கூறினார்கள். யூதாவின் ஜனங்கள் எழும்பிக்கொண்டிருக்கிற வாசல்களையும்,     அலங்கத்தையும் பாராமல்,     இன்னும் சுத்தம் செய்யப்பட வேண்டிய மிச்சமாயிருக்கிற மண்மேட்டைப் பார்க்கிறவர்களாய் காணப்பட்டார்கள். அவர்களுக்குள் அவ்விசுவாசமும்,     சோர்வும் இணைந்து காணப்பட்டது. யூதா என்றாலே துதி என்று அர்த்தம். எப்போதும் போர் முனையில் முன்பு நிற்பவர்கள்,     பாடித்துதித்து வெற்றியைப் பெற்றுக் கொடுப்பவர்கள்,     அவர்கள் பலத்த தைரியசாலிகள்.  அப்படிப்பட்டவர்கள்  வாயிலிருந்து சோர்வின் வார்த்தைகள் வெளிப்படுவது ஆச்சரியமாய் காணப்படுகிறது. வேலையைத் தொடங்கும் போது உற்சாகமாய் காணப்பட்டவர்கள்,       முடிவதற்குள்  சோர்ந்து போகிறவர்களாய் காணப்பட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     கர்த்தருடைய பணி கடினமானது தான்,     ஆனால் அது ஒரு சுகமான சுமை. துவக்கம் அற்பமாய் காணப்பட்டாலும்,     அதின் முடிவு சம்பூரணமாய் காணப்பட வேண்டும். ஆகையால் ஒரு நாளும் சோர்வுக்கு இடம் கொடாதிருங்கள்.  உங்களைப்  பலத்தால் இடைக்கட்டிக் கொண்டு கர்த்தருடைய பணியாகிய நல்ல வேலைக்கு உங்கள் தோள்களையும்,     கரங்களையும் கொடுங்கள். அப்பொழுது அலங்கம் ஐம்பத்திரண்டு நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதைப் போலக் கர்த்தருடைய காரியங்களும் குறித்த வேளையில் நிறைவேறும். கர்த்தருடைய வேலையை உற்சாகப்படுத்த முடியவில்லையென்றாலும்,     அதைச் செய்கிறவர்களுக்கு மனமடிவை உண்டாக்கிவிடாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்கள் செய்கைக்குத் தக்க பலனைத் தந்து உங்களை கனம் பண்ணி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae