கல்லும்,    உத்திரமும் (Stone and beam).

கல்லு சுவரிலிருந்து கூப்பிடும்,    உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும் (ஆபகூக் 2:11).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9KFiBlFPUY0

உயிருள்ளவைகள் பேசும்,    சத்தம் எழுப்பும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆபேலின் ரத்தம் பூமியிலிருந்து ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டது. அவனுடைய சகோதரன் காரணமில்லாமல் அவனைக் கொலைசெய்ததின் நிமித்தம்,    பழிவாங்கும் படிக்கு ஆண்டவரை  நோக்கிக் கூப்பிட்டது. அதுபோல  தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த  சாட்சியினிமித்தமும்  இரத்தசாட்சிகளாய் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்கள்; பலிபீடத்தின் கீழிருந்து  பரிசுத்தமும்  சத்தியமுள்ள ஆண்டவரே,    தேவரீர் பூமியின்மேல்  குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும்  நியாயத்தீர்ப்புச்செய்யாமலும்  பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள் என்று வெளி. 6:10ல் எழுதப்பட்டிருக்கிறது.  மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் காணப்படுவதினால் அவைகள் பேசுகிறது. ஆனால் உயிரற்ற பொருட்கள் கூட நமக்கு விரோதமாகக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்,    சாட்சியிடும் என்பது ஆச்சரியமாய் காணப்படுகிறது. 

ஆபகூக் 2:9-20 வசனங்களை வாசிக்கும் போது நான்கு முறை ஐயோ என்ற வார்த்தை வருகிறது. பேராசையின் நிமித்தம் பொல்லாத ஆதாயத்தைத்  தேடுகிறவனுக்கு ஐயோ என்றும்,    வன்முறை மூலம் ஜனங்களைக் கொல்லுகிறவனுக்கு ஐயோ என்றும்,    குடியினால் தன்னையும்,    தோழனையும் வெறிக்கப் பண்ணுகிறவனுக்கு ஐயோ என்றும்,    விக்கிரக ஆராதனைக் காரனுக்கு ஐயோ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. பேராசைக் காரர்கள் பொருளாசை உடையவர்களாயிருந்து,    தன் வீட்டையும் தன்காரியங்களைக் குறித்து மாத்திரம் கவலையுடையவர்களாய் காணப்படுவார்கள். எளியவர்களைக் குறித்தும்,    தேவைகளில் காணப்படுகிறவர்களைக் குறித்தும்,    கர்த்தருடைய காரியங்களில் காணப்படுகிற தேவைகளைக்  குறித்தும் கவலையற்றவர்களாய் காணப்படுவார்கள். ஆண்டவர் ஐசுவரிய வானைப் பற்றி கூறிய உவமையில்,    ஐசுவரிய வானுடைய  நிலம் நன்றாய்  விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து  வைக்கிறதற்கு இடமில்லையே,     நான்  ஒன்று  செய்வேன்,    என் களஞ்சியங்களை இடித்து,    பெரிதாகக் கட்டி,    எனக்கு விளைந்த  தானியத்தையும்  என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,     பின்பு:  ஆத்துமாவே,    உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது,    நீ இளைப்பாறி,    புசித்துக் குடித்து,    பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.  தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே,    உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும்,    அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல்,    தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்  என்றார். தன் ஆத்துமாவைக் குறித்து கவலையில்லாமல்,    அதற்கு அழிவைத் தேடின ஒரு பேராசையுள்ள மனிதனாய் அவன் காணப்பட்டான். 

பேராசையுள்ள மனிதர்களுக்கு எதிராக உயிரற்றப் பொருட்களாய் காணப்படுகிற அவன் வீட்டின் சுவரிலிருக்கிற கல்லும்,    மச்சிலிருக்கிற உத்திரமும் சாட்சியிடும் என்பதாய் வேதம் கூறுகிறது. இயேசுவும் கூட,    நீங்களும் நானும் அவருக்காகப் பேசவில்லையென்றால்,     கல்லுகளே கூப்பிடும் என்றார்.  அவர் கல்லுகளினாலே கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது.  அதுபோல,    துரு நமக்கு விரோதமாய் சாட்சியிடும்  என்று யாக்கோபு 5:3 கூறுகிறது: உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது,    அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது,    அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத்  தின்னும் கடைசிநாட்களிலேபொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,    உங்கள் வீட்டின் கல்லும்,    உத்திரமும்,    துருவும் உங்களைக் குறித்து தேவனுக்கு முன்பாக நற்சாட்சி கூறுமா? அல்லது துற்சாட்சி கூறுமா? என்று யோசித்துப் பாருங்கள். நற்சாட்சி உடையவர்களாய் நீங்கள் காணப்படும் போது இம்மை லும், மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae