பன்னிரண்டு (Twelve )

வெளி 21 : 13 , 14 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9yupYouU8pw

பன்னிரண்டு என்ற எண் வேதாகமத்தில் சில இடங்களில் வருகிறது. பழைய ஏற்பாட்டில் யாக்கோபிற்கு பிறந்த பன்னிரண்டு கோத்திரங்கள் காணப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சீஷர்களாகிய பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் காணப்பட்டார்கள். புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்திலும் பன்னிரண்டு வாசல்கள், பன்னிரண்டு தேவ தூதர்கள், பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள், பன்னிரண்டு முத்துக்கள் என்று காணப்படுகிறது. பன்னிரண்டு வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தது. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களும் கிறிஸ்துவின் மணவாட்டியாக புதிய எருசலேமில் பங்கடைவதை மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.

ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் நகரத்தின் மதிலுக்கு அஸ்திபாரமாய் இருந்தார்கள். முழு நகரத்திற்கும் அஸ்திபாரமாய் இருப்பவர் இயேசு மாத்திரமே. அப்போஸ்தலர்கள் அன்று மதிலுக்கு அஸ்திபாரம் போட்டார்கள், அந்த அஸ்திபாரத்திலேயே இன்று சபையில் நாம் பெரிதும் உயரமுமான மதிலை கட்டிக்கொண்டிருக்கிறோம். பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது (வச. 21). முத்து என்பதும் விலையேறப்பெற்ற பொருளாகக் காணப்படுகிறது. மாத்திரமல்ல, நகரத்தின் வீதிகளில், நடக்கும் பாதைகளில் எங்கும் தங்கம் காணப்பட்டது. பூமியில் தார், சிமெண்ட் வைத்துதான் பாதைகளை அமைப்பார்கள். நாம் அதின்மேல் நடந்துசெல்லுவோம். ஆனால் புதிய எருசலேமில் போடப்படும் சாலை தங்கத்தினால் போடப்பட்டிருக்கும். இந்நாட்களில் எப்படியாவது தங்கத்தை வாங்க வேண்டும் என்று ஜனங்கள் விரும்புகிறார்கள். தங்களால் முடிந்த தங்கத்தை ஒவ்வொரு மனிதனும், தேசமும் வாங்குகிறார்கள். இங்கே ஒரு முக்கியமான சத்தியத்தை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். இந்த பூவுலகில் தங்கத்தின்மேல் வரும் இச்சையை மேற்கொண்டு ஜீவிப்பவர்கள் எவர்களோ, அவர்களே புதிய எருசலேமில் தங்கத்தை மிதித்து நடப்பதற்கு பாத்திரவான்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்ட பரிசுத்த நகரத்தை வாஞ்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களே பூமிக்குரிய இச்சைகளை ஜெயிப்பார்கள். பூமியிலே பொக்கிஷங்களை சேர்க்கிறர்வகளாக நாம் ஓட அழைக்கப்பட்டவர்களல்ல, பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைக்க அழைக்கப்பட்டவர்கள் என்ற சிந்தை நமக்கு காணப்படவேண்டும். பரலோகத்தில் சேர்க்கும் பொக்கிஷத்தில் தங்கமே நம்முடைய காலுக்குக் கீழ்தான் இருக்கும் என்றால், அந்த பரிசுத்த நகரம் எவ்வளவு விலைமதிப்புள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org