யேகோவா ஷம்மா – கர்த்தர் அங்கே இருக்கிறார் (Jehova Shammah – The LORD is there )

எசே 48 : 35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KJau4FETQ5M

நம் தேவனுக்கு வேதாகமத்தில் பல நாமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று யேகோவா ஷம்மா. இயேசு பிறந்தபோது அவருக்கு இம்மானுவேல் என்னும் பெயராலும் அழைக்கப்பட்டார். அப்படியென்றால் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். அதுபோல நாம் இருக்கும் இடங்களில் அவர் யேகோவா ஷம்மா என்று அழைக்கப்படுகிறார். யேகோவா ஷம்மா என்றால் தேவன் அங்கே இருக்கிறார் அல்லது பிரசன்னம் அருளும் கர்த்தர் என்று அர்த்தமாகக் காணப்படுகிறது.

நாம் அனைவரும் கட்டியெழுப்ப வேண்டிய திருச்சபை இதுவே; அதாவது, ஆண்டவர் தம்முடைய முழு மகிமையோடு நம்மிடையே வீற்றிருக்கிறார் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளும் திருச்சபையாக நம்முடைய சபைகள் மாற வேண்டும். ஆனால், இதனை உருவாக்க, ஆண்டவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியும் எசேக்கியேலைப் போன்ற மனிதர்கள் அவருக்குத் தேவைப்படுகிறார்கள்.

நீங்கள் இருக்கும் வீடுகளில், நீங்கள் பணிபுரியும் ஸ்தலங்களில், நீங்கள் கூடி ஆராதனை செய்யும் இடங்களில் தேவன் யேகோவா ஷம்மாவாக இருக்கிறாரா என்பதை நாம் நிதானித்துப்பார்க்க வேண்டும். ஒரு வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சினிமாக்களும், நாடகங்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்குமென்றால், அங்கே யேகோவா ஷம்மாவாக தேவன் இருக்க முடியாது. சபைகளில் சண்டைகளும், பிரிவினைகளும், அந்நிய அக்கினியை கொண்டுவருபவர்களுமாய் விசுவாசிகள் இருந்தால் அங்கே யேகோவா ஷம்மாவாக தேவன் இருக்க முடியாது. ‘நான் உங்கள் நடுவே உலாவி உங்கள் தேவனாய் இருப்பேன்’ என்பது அவருடைய வாக்கு மாத்திரமல்ல, அவர் வாஞ்சையாய் இருக்கிறது. உங்கள் வீடு ஒரு குட்டி பரலோகமாக இருக்க வேண்டுமென்றால், யேகோவா ஷம்மா இருப்பதற்குத் தடையாக இருக்கிற காரியங்களை வெளியேற்ற வேண்டும்.

ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிக்கும்; தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார் என்று சங் 46:4, 5 கூறுகிறது. ‘தேவன் அதின் நடுவில் இருக்கிறார்’ என்ற வார்த்தையை கவனியுங்கள். அவர் உங்கள் நடுவிலிருக்கும்போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை. நாம் ஒருபோதும் கைவிடப்படக்கூடாது என்பதற்காகவே அவர் ஒரு நொடி கைவிடப்பட்டார். காரணம் அவர் உங்கள் கூட எப்பொழுதும் யேகோவா ஷம்மாவாக இருப்பதற்கே என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

யாராவது ஒருவர் வேலையை இராஜினாமா செய்து விடைபெறும்போது, அவர்களுடைய கடைசி வார்த்தைகளை எல்லாருக்கும் பகிர்ந்துகொள்வார்கள். அதுபோல இயேசு இந்த உலகத்திலிருந்து பிரிந்து செல்லும்போது அவர் கூறிய பிரியாவிடைச் சொல் என்னவென்றால், ‘இதோ, உலகத்தின் முடிவுப்பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்றார். ஆம், இயேசு யேகோவா ஷம்மாவாக உங்களோடுகூட முடிவுப்பரியந்தம் இருப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *