காலங்கள் தேவனின் கட்டுப்பாட்டில் உள்ளது (God is in control of the times)

அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர், ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர், ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் (தானி. 2:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0eJiraQczAE

நாம் ஆராதிக்கிற தேவன் ஒருவரே காலத்தை நிர்வகிக்கிறவர், மாற்றங்களை நிகழ்த்துகிறவர், அவருடைய அனுமதியில்லாமல் அணுவும் அசையாது. நேபுகாத்நேச்சார் என்ற ராஜா அந்நாட்களில் காணப்பட்ட சூப்பர்பவர் தேசமாகிய பாபிலோனிய ராஜா. ஒருநாள் அவர் படுக்கையில் படுத்திருக்கும் போது, இனி சம்பவிக்கப் போகிறவை என்ன என்ற நினைவுகள் அவருக்குள் வந்தது. அப்போது கர்த்தர், நேபுகாத்நேச்சாருடைய நாட்கள் துவங்கி, கடைசி மட்டும் காணப்படப்போகிற அவருடைய அசைவில்லாத கல் ராஜ்யம் வரைக்கும் உள்ள காரியங்களை தானியேலின் மூலம் வெளிப்படுத்தினார்.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்குள்ளும் இனி என்ன சம்பவிக்கும் என்ற எண்ணங்கள் அவ்வப்போது எழும்ப வேண்டும். வேதம் இனி சம்பவிக்கப்போகிற அனேகக் காரியங்களைக் குறித்துப் பட்டியலிட்டுக் கூறுகிறது. கடைசி நாட்களில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும், இயேசுவின் ரகசிய வருகையைப் பற்றியும், அதன்பின்பு அந்திக்கிறிஸ்து என்ற துஷ்ட மனுஷனுடைய ஏழு வருட ஆட்சியைப் பற்றியும், அதன்பின்பு இயேசுவின் இரண்டாம் வருகையாகிய பகிரங்க வருகையைப் பற்றியும், அதன்பின்பு ஆர்மகதோன் யுத்தத்தைப் பற்றியும், அந்த யுத்தத்தின் முடிவில் அந்நிக்கிறிஸ்துவும் கள்ளத்தீர்க்கதரிசியும் அக்கினிக்கடலில் தள்ளப்படுவதைப் பற்றியும், சாத்தான் ஆயிரம் வருஷம் சங்கிலிகளினால் கட்டப்பட்டு பாதாளத்தில் அடைத்து வைக்கப்படுவதைப்பற்றியும், அதன்பின்பு எருசலேமை மையப்படுத்தி இயேசு ஆயிரம் வருஷம் பூமியின்மீது ஆட்சிசெய்வதைப் பற்றியும், அதன்முடிவில் கட்டப்பட்ட சாத்தான் கட்டவிழ்க்கப்பட்டு நடக்கப் போகிற கோகு மாகோகு யுத்தத்தைப் பற்றியும், சாத்தானும் அக்கினிக்கடலில் தள்ளப்படுவதைப் பற்றியும், அதன்பின்பு இயேசுவின் வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பைப் பற்றியும், துன்மார்க்கர்களை அந்திக்கிறிஸ்துவோடும், கள்ளத்தீர்க்கதரிசியோடும், சாத்தானோடும் அக்கினிக்கடலில் தள்ளப்படுவதைப் பற்றியும், பின்பு கர்த்தருடைய ஜனங்கள் புதிய எருசலேமில் இயேசுவோடு நித்திய நித்தியமாய் வாழ்வதைப்பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. தேவ ஜனங்கள் இவற்றையெல்லாம் மனதில் வைத்து இயேசுவை சந்திக்க ஆயத்தப்படுவதற்கு இந்தக் கிருபையின் நாட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகையால் இனி சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார் என்று லூக்கா 21:36ல் இயேசு கூறியதை நினைவில் கொண்டு வாழுங்கள். 

இனி சம்பவிக்கப் போகிறவை என்ன என்று சிந்தித்த நேபுகாத்நேச்சாருக்கு சொப்பனத்தில் ஒரு சிலையைக் கர்த்தர் காண்பித்தார். அதின் தலை பொன்னைப் போலக் காணப்பட்டது, அது நேபுகாத்நேச்சாருடைய பாபிலோனிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது, மார்பும் புயமும் வெள்ளி, அது அதற்குப் பின்பு எழும்புகிற கீழ்த்தரமான மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது,  வயிறும் தொடையும் வெண்கலம், அது அதற்குப் பின்பு எழும்புகிற இன்னும் கீழ்த்தரமான கிரேக்கச் சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது, கால்கள் இரும்பும் அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதிக் களிமண் என்பது அடுத்ததாக எழும்புகிற கீழ்த்தரமான ரோமச் சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது. இயேசு ரோமசாம்ராஜயத்தின் ஆட்சியின் நாட்களில் பிறந்தார். அப்போது கைகளால் பெயர்க்கப்படாத கல் பெயர்ந்து உருண்டு வந்து சிலையின் பாதங்களில் மோதி, சிலையைத் தூசியாக்கிச் சிலை இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கலந்து போகும் படிக்குச் செய்தது, அது புருஷச் சித்தத்தினால் பிறக்காத இயேசுவையும் அவருடைய கல் ராஜ்யத்தையும் குறிக்கிறது.  கல் வளர்ந்து பூமியை நிரப்பிற்று என்பது, மற்ற எல்லா ஆளுகைக்கும், அதிகாரங்களுக்கும் முடிவை உண்டாக்கி, கடைசியில் எழும்புகிற அந்திக் கிறிஸ்துவின் ராஜ்யத்தையும் அழித்து, இயேசுவின்  ராஜ்யமும், ஆளுகையும் மட்டும் என்றைக்கும் நிற்கும் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆயிர வருட அரசாட்சியிலும் இயேசுவே எருசலேமை மையப்படுத்தி ஆளுகைச் செய்வார்,  அப்போது பூமி முழுவதும் கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். இனி என்ன சம்பவிக்கும் என்று சிந்தித்த நேபுகாத்நேச்சாருக்கு, இயேசுவின் ராஜ்யமே நிரந்தரமானது என்பதைப்பற்றிய விளக்கத்தைக் கர்த்தர் வெளிப்படுத்தினார். 

கர்த்தருடைய பிள்ளைகளே, காலங்களும் நேரங்களும் கர்த்தருடைய கட்டுப்பாட்டில் காணப்படுவதால் அவர் அறியாதபடிக்கு ஒன்றும் உங்கள் வாழ்க்கையில் சம்பவிப்பதில்லை. தேசங்களின் யுத்தச் சூழ்நிலைகள், பொருளாதார மந்த நிலைகள், பாதுகாப்பற்ற நிலைகள் எல்லாவற்றையும் கர்த்தர் அறிவார். ஆகையால் உங்களைப்பற்றிய எல்லாவற்றையும்  அறிந்த ஆண்டவருடைய கரங்களில் உங்களைப் பூரணமாய் அர்ப்பணித்து மகிழ்ச்சியோடு காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *