கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர் (சங்கீதம் 139:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Ir-I9ebBNXw
நீங்கள் உங்களை அறிந்திருப்பதை விடக் கர்த்தர் உங்களை அறிந்திருக்கிறார் என்ற உணர்வோடு கர்த்தருடைய ஜனங்கள் வாழ வேண்டும். அவர் பூமியெங்கும் நிறைந்திருக்கிறவர், எல்லாவற்றையும் அறிந்தவர். அவருடைய கண்கள் பூமி எங்கும் உலாவுகிறது. அவருடைய கண்களுக்கு மறைவாக ஒருவரும் ஒன்றையும் செய்யமுடியாது. வனாந்தரத்தில் தண்ணீருக்காக அலைந்து திரிந்த ஆகாரைக் அவருடைய கண்கள் கண்டது. சூரைச் செடியின் கீழ் சோர்ந்து போய் படுத்திருந்த எலியாவைக் அவருடைய கண்கள் கண்டது. கப்பலின் அடித்தட்டில் படுத்துத் திசைமாறிச் சென்று கொண்டிருந்து யோனாவைக் கர்த்தருடைய கண்கள் கண்டது. அத்திமரத்தின் கீழ்க் காணப்பட்ட கபடமற்ற உத்தம இஸ்ரவேலனாகிய நாத்தான்வேலையும், காட்டத்தி மரத்தில் இலைகளுக்குள் மறைந்திருந்த சகேயுவையும் அவருடைய கண்கள் கண்டது. அதை அறிந்திருந்த சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தாவே என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் என்றும், என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும் என்றும் வேண்டுதல் செய்கிறான்.
தேவனுக்கு எல்லாம் தெரியும் என்பது மட்டுமல்ல, அவருக்கு என்னையும் என் வழிகளையும் தெரியும் என்ற அறிவு இன்னும் நாம் பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும். எரேமியா தீர்க்கனும் கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர், என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர் என்று அறிக்கையிட்டதை எரேமியா 12:3ல் வாசிக்க முடிகிறது. யோபு பக்தனும் கூட நான் போகும் வழியைக் கர்த்தர் அறிந்திருக்கிறார் என்று கூறினார். இந்நாட்களில் காணப்படுகிற விசுவாசிகளுக்குள்ளும் ஊழியர்களுக்குள்ளும் இந்த எண்ணங்கள் இல்லை. ஆகையால் தான் வாழ்க்கையில் அனேகத் தாறுமாறுகளும், கோணல்களும் காணப்படுகிறது. கர்த்தரைக் குறித்த பயம் கடுகளவு கூட இல்லாதவர்களைத் திரளாய் பார்க்கமுடிகிறது. தன்னுடைய வழி கர்த்தருக்குப் பிரியமானதாக இல்லை என்பதை பிலேயாம் அறிந்த பின்பும் பொருளாசையின் நிமித்தம் பாலாக்கின் பிரதானிகளோடு சென்றான். உருவின பட்டயத்தோடு நின்ற தேவதூதனை அவனுடைய கழுதையின் கண்கள் கண்டு புரிந்து கொண்டது, ஆனால் ஊழியக்காரனுக்குப் புரியவில்லை. இப்படிப்பட்ட கண்செருகிப் போன குருடர்கள்; அனேகர் காணப்படுகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தாவே என்னை ஆராய்ந்து அறியும் என்பது நம்முடைய ஜெபமாய் காணட்டும். ஒருவேளை அவரை வேதனைப் படுத்துகிற காரியங்கள் நம்மில் காணப்படுவதைக் கர்த்தருடைய ஆவியானவர் உணர்த்தும் போது உடனே மனம்திரும்பிச் சரி செய்துவிடுங்கள். மீண்டும் அப்படிப்பட்ட காரியங்களை உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து செய்யாதிருங்கள். எப்பொழுதும் கர்த்தருக்கு பயந்திருக்கிறவன் பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கர்த்தருடைய கண்கள் என்னைக் காண்கிறது என்ற உணர்வோடும், பயத்தோடும், நடுக்கத்தோடும், பரிசுத்த அலங்காரத்தோடும் கர்த்தரை சேவிக்கும் போது அவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

