கமாலியேலின் கொள்கை (Gamaliel’s principle)

அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி (அப். 5:34)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5RPYBviVduM

ஆதி சபையின் நாட்களில் அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தின் நிமித்தம் திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக்  கர்த்தரிடமாக அதிகதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.  அவர்களைச் சிறையில் அடைப்பதும்,     உபத்திரவப் படுத்துவதும்,     ஆலோசனை சங்கத்தில் நிறுத்துவதுமாய் ஆசாரியர்கள் காணப்பட்டார்கள்.  அவர்களுக்குள் கமாலியோல் என்ற நியாயசாஸ்திரி ஒருவன் காணப்பட்டான். அவன் சகல யூத ஜனங்களுக்குள்ளும் கனம் பெற்றவனாய்க் காணப்பட்டான். அப்போஸ்தலனாகிய பவுல் சவுலாய்க் காணப்பட்ட நாட்களில் அவனுடை மாணவனாய்க் காணப்பட்டவன். அவன்  யூதர்களுடைய ஆலோசனை சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தான்.   கமாலியேல் அவர்கள் நடுவில் நின்று இரண்டு பேரைக்குறித்து  அவர்களுக்கு சொன்னான்.     ஒருவன் தெயுதாஸ் என்பவன்,     மற்றவன் யூதாஸ்  என்பவன். இவர்கள் யூதர்களுக்கு முன்பாக தங்களைப் பெரியவர்களாய் காட்டி,     ஒரு கூட்ட ஜனங்கள் தங்களைப் பின்பற்றும் படிக்குச் செய்தார்கள். ஆனால் எல்லாரைப் போல அவர்களும்  மரித்துப்போனார்கள்,      அவர்களைப் பின்பற்றினவர்கள் சிதறடிக்கப்பட்டுக் காணாமல் போனார்கள். இப்படி மனுஷனால் உண்டாகிற காரியங்கள் அழிந்து போய்விடும்,     தேவனால் உண்டானவைகள்  மாத்திரம் நிலைநிற்கும், ஆகையால் தேவனோடு போர் செய்யாதிருங்கள் என்று ஆலோசனைக் கூறினான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     மனுஷர்கள் தங்களைப் பெரியவர்களாய் காட்டி,     கட்டி எழுப்புகிற எந்தக் காரியங்களும், ஊழியங்களும் நிலைநிற்காது. தங்களுக்குப்  பேர் உண்டாகும் படிக்குக் கட்டின பாபேல் கோபுரம் நிலைநிற்கவில்லை.     என்னுடைய மகிமைப் பிரதாபத்திற்கு என்று நான் கட்டின மகா பாபிலோன் என்று நேபுகாத் நேச்சார் கூறினான்,     அதுவும் நிலைநிற்கவில்லை. நம்முடைய பெயர் பிரஸ்தாபத்திற்கு என்று நாம் செய்கிற எந்தக் காரியங்களும்,     கட்டி எழுப்புகிற எதுவும் நிலைநிற்பதில்லை. தேவனிடத்திலிருந்து வருகிறவைகள் மாத்திரம் என்றும் நிலைத்திருக்கும்.

கமாலியேலின் கொள்கையானது இந்நாட்களில் காணப்படுகிற கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பொருந்தும்.  ஒவ்வொரு ஊழியர்களையும் பின்பற்றி ஒரு கூட்டம் செல்லுகிறது. ஒவ்வொரு விதமான உபதேசங்களையும், ஆராதனை முறைமைகளையும் பின்பற்றுகிறவர்களும் உண்டு. கள்ள உபதேசங்களும் எங்கும் பெருகிக் காணப்படுகிறது. சாத்தான் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்து, தன்னையும் உலகத்தின் ஒளியாம் இயேசுவைப் போல காட்டி, அனேகரை வஞ்சிக்கிறான். சத்தியத்திற்கும் பொய்க்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இயேசு பிலாத்துவுக்கு முன்பு நிற்கும் போது, பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால்  நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்று யோவான் 18:37ல் கூறினார். கடைசி காலத்தில் சத்தியத்தை விரும்புகிறவர்கள் மட்டும், நானே சத்தியம் என்றவரை உண்மையாய் பின்பற்ற முடியும். அவர் சத்தியபரர், அவருடைய வசனம் முழுவதும் சத்தியம். ஆகையால் பொய் என்றும் நிலைத்து நிற்காது, வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.   பொய்யும் வஞ்சகமும் ஒருநாளில் வெளியரங்கமாகி, அவமானப்பட்டு, அழிந்து போவது நிச்சயம்.  ஆகையால் நீங்கள் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் போரிடாமல், கமாலியேல் கூறின் ஆலோசனையைப் போல, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற இயேசுவின் சத்தியவார்த்தைகளை உண்மையாய் பின்பற்றுங்கள். அப்போது நீங்கள் கனமடைந்து, நிலைத்திருந்து, கனியுள்ளவர்களாய்க் காணப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae