நீ வெட்கப்பட்டுப்போவதில்லை.

என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும், என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்(சங்கீதம் 25:2).

தாவீதை அநேகர் வெட்கப்படுத்தும்படி செய்தார்கள். போர் முனையில் தன் சகோதரர்களால் வெட்கப்படுத்தப்பட்டான், சவுலினால் வெட்கப்படுத்தப்பட்டான், தன் குமார்களால் வெட்கப்படுத்தப்பட்டான். இப்படி தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அவனை நெருக்கினப்படியால், அவன் இருதயம் மிகவும் வியாகுலப்பட்ட வேளையில் அவன் கர்த்தரை நோக்கி: தேவனே நான் வெட்கப்பட்டுப்போகாதப்படி செய்யும், என்று சொல்கிறதைப் பார்க்கமுடிகிறது. அந்த அளவிற்கு அவனுடைய இருதயம் வியாக்குலப்பட்டிருந்தது. கர்த்தர் அவனை விடுவித்தார். கர்த்தரை நம்பினவர்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை, அவன் எந்த இடத்தில் வெட்கப்பட்டு நின்றானோ, அதே இடத்தில் கர்த்தர் அவன் தலையை உயர்த்தினார். சாத்தான் தேவ ஜனங்களை வெட்கப்படுத்தும்படி செய்கிறவன், பிள்ளைகள் மூலம், உறவினர்கள் மூலம், நண்பர்கள் மூலம் வெட்கத்தை கொண்டு வருவான், வேலை செய்கிற இடத்திலேயும் வெட்கப்படும்படி செய்வான்.

ஒரு இராணுவ வீரர், இயேசுவை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை கிறிஸ்தவ பெயராக மாற்றிக்கொணடார். அந்த கிறிஸ்தவ பெயரிலேயே அவருக்கு கடிதங்களும் வந்தது. அவர் தான் வேலை செய்யும் இடத்தில் இயேசுவை குறித்து எல்லோருக்கும் சுவிசேஷம் அறிவிப்பார். அங்கே வெவ்வேறு மார்க்கத்தையுடையவர்கள் இருந்தபடியால் ஒரு சிலருக்கு இவரை பிடிக்காமல் போனது, இவரை எப்படியாவது “வெட்கப்படுத்த வேண்டுமென்று நினைத்து” உயர் அதிகாரியினிடத்திலே இவரைக் குறித்து புகார் அளித்தனர். இவர் அதிகம் படிக்காதவர் என்பதால் உயர் அதிகாரியினிடத்தில் எப்படி பேசுவதென்பது தெரியாது. (அந்த உயர் அதிகாரி ஒரு சீக்கியர்) ஒரு நாள் உயர் அதிகாரி அவரை அழைத்து உன் பெயரை ஏன் கிறிஸ்தவ பெயராக மாற்றிக்கொண்டாய் அதற்கான விளக்கத்தை தரவேண்டும் என்று கேட்டார், அதற்கு இவர் தன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த நன்மைகளை அவரிடம் ஒரு சிறு சுவிசேஷமாக சொல்ல ஆரம்பித்தார். இதைக்கேட்ட உயர் அதிகாரி இவரிடத்தில் எந்த குற்றத்தையும் காணாதப்படியினால், இவரின் உண்மையையும், நேர்மையையும் பார்த்து இவருக்கு “பதவி உயர்வையும்” கொடுத்து அனுப்பினார். மறு நாள் காலையில் புகார் கொடுத்தவர்கள் எல்லாரும் இவருக்கு கடுமையான தண்டனை கிடைத்திருக்கும் என்று நினைத்தார்கள், ஆனால் அங்கு நடந்ததோ வேறு, யார் புகார் அளித்தார்களோ அவர்களுக்கு மேலாக உயர் அதிகாரியாக மாற்றப்பட்டதைக் கண்டு அவர்கள் வெட்கமடைந்தார்கள். இவர் எந்த இடத்தில் வெட்கப்பட்டு நின்றாரோ, அதே இடத்தில் கர்த்தர் அவர் தலையை உயர்த்தினார்.

கர்த்தருடைய ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுவதிலை, அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு வழிகளைத் திறந்துகொடுக்கிறவர், தமக்கு பயந்து தமது வழியில் செம்மையாய் நடப்பவர்களை வெட்கப்படுத்தாதவர், உன்னை வெட்கப்படுத்த நினைப்பவர்களை கர்த்தர் வெட்கப்படுத்துவார், உன்னை அதிசயமாய் நடத்துவார். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை”(யோவேல் 2:26) என்று கர்த்தர் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org