சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

சமாதானகுலைச்சல் முதன்முதலாக எப்பொழுது காயின் தன் சொந்த சகோதரன் ஆபேலை கொன்றானோ அன்றே வந்தது. அது தொடர்ந்து இயேசு சொன்னவாறு யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; … ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் என்பதாக இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது தங்கள் நாடு பொருளாதாரத்தில் உயர்ந்திருந்தால் இல்லை ராணுவத்தில் பலத்திருந்தால் சமாதானமாய் இருக்கலாமென்று. ஆனால் பிரச்னை அதுவல்ல; மானிடத்தின் இருதயமே சமாதானகுலைச்சலுக்கு காரணம்.

உண்மையென்னவென்றால் நாம் தேவனோடுகூட சமாதானம் ஆகும் வரை இந்த உலகத்திற்கு சமாதானமில்லை. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து…( எபே 2 : 13 , 14 ) என்று ஏசுவே நமக்கு சமாதான காரணர் என்று சொல்வதை பார்க்கலாம்.

இந்த பொல்லாத உலகத்தில் முதலாவதாக நாம் தேவனிடம் சமாதானமாக வேண்டும். தாவீது சொல்கிறார் சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் ( சங் 4 : ௮ ).

எப்படி தேவனிடம் சமாதானமாய் இருப்பது? முதலாவது, யேசுவிடம் சண்டையிடுவதையோ இல்லை அவரை நிராகரிப்பதையோ நாம் நிறுத்திவிடவேண்டும். காரணம் அவரே சமாதான பிரபு, சமாதான கர்த்தர். இரண்டாவது, அவரிடம் நாம் நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுக்க வேண்டும். மூன்றாவது, அவருடைய ஊழியத்தை செய்ய வேண்டும்.

எங்கே நாம் சமாதானமாய் இருக்க வேண்டும்? முதலாவது, நம்முடைய வீட்டில் சமாதானமாய் இருக்க வேண்டும். யார் சண்டையிட்டாலும் ஆவியில் முதிர்ச்சியடைந்தவர்கள் முதலாவது சமாதானம் பண்ண வேண்டும். நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே (ரோம 5 : 10 ). பாருங்கள் தேவனை முதலாவது நமக்காக சமாதானம் செய்தார்.

இரண்டாவது, சபையில் சமாதானம்பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். மரியாளும் யோசேப்பும் இயேசுவை ஆலயத்தில் தொலைத்தார்கள். அப்படி இயேசுவை நாம் நம்முடைய சபையில் பதவி ஆசைக்காக சண்டைபோட்டு இயேசுவை தொலைத்துவிட கூடாது.

மூன்றாவது, வேலைசெய்யும் இடங்களில் மற்றும் சமுதாயங்களில் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். ஆவியின் கனியாகிய சமாதானத்தை வெளிப்படுத்தி சமாதானமாய் இருக்க வேண்டும்.

ஐந்தாவதாக, உலகத்திற்கு சமாதானமாய் இருக்க வேண்டும். உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? என்று வேதம் சொல்லுகிறது.

இயேசு சொன்னார் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக ( யோவா 14 : 27 ). இயேசு ஒருவரே உங்கள் ஒவ்வருவருக்கும் சமாதானத்தை கொடுக்க முடியும்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். தேவனுடைய பிள்ளை என்று எழுதப்படவில்லை; மாறாக புத்திரர் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் கர்த்தருடைய பார்வையில் நீங்கள் முதிர்ச்சிபெற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள்.

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
நீங்கள் தேவனுடைய புத்திரர் என்று அழைக்கப்படுவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களுடனே கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of god church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *