யோவா 15 : 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FbxsAw0Eo94
கிறிஸ்துவில் நிலைத்திருப்பதென்றால், ஜீவனுள்ள தேவ வார்த்தையை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, அதின்படி கீழ்ப்படிந்து வாழ்வது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை வெறுமனே கேட்பவர்கள் அல்ல, அதின்படி செய்பவர்களே, வார்த்தையில் நிலைத்திருப்பவர்கள். விதை தேவனுடைய வசனம். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். நம்முடைய இருதயத்தில் வசனம் விதைக்கப்பட்டதாகக் காணப்பட வேண்டும். கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே என்று பேதுரு அப்போஸ்தலனும் 1 பேதுரு 1:25 ல் ஆணித்தரமாகக் கூறுகிறான். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், கர்த்தருடைய வார்த்தை ஒழிந்துபோகாது. ஒழிந்துபோகாத கர்த்தருடைய வசனத்தில் நிலைத்துநிற்கிறவர்களாக சபை ஜனங்கள் காணப்படவேண்டும்.
பழைய ஏற்பாட்டிலும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த ஆண்டவர், மோசேயின் மூலமாக தீர்க்கமாக இந்த காரியத்தைக் கூறினார். உபா 6:6 கூறுகிறது, இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது என்பதாக. அதாவது தேவனுடைய வார்த்தைகள் இருதயத்தில் நிலைத்திருக்கவேண்டும், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அசைவும் வார்த்தையின்படி இருக்கவேண்டும். அதை தான் ஆவியானவர் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருங்கள் என்று கூறுகிறார். மாத்திரமல்ல, வேத வார்த்தைகளை பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும், குடும்ப உரையாடல்களில் பேச வேண்டும், வெளியே உலகத்தில் காணப்படுகிறவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளையையும் தேவன் கொடுத்தார்.
இப்படி வேத வார்த்தையில் நிலைத்திருப்பவர்களுக்கு, ஆண்டவர் ஒரு வாக்குத்தத்தை கொடுக்கிறார். நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்ற வாக்குத்தத்தை கொடுக்கிறார். வேதத்தை நேசிக்காதவர்கள், வேதத்தை தினந்தோறும் வாசிக்காத கிறிஸ்தவர்கள், இரவும் பகலும் அவருடைய வார்த்தையை தியானிக்காத விசுவாசிகள் இந்த வாக்குத்தத்தை உரிமை பாராட்ட முடியாது. தீர்க்கதரிசனம் மற்றும் சொப்பனம் போன்றவற்றிலேயே இன்றைய கிறிஸ்தவம் மோகத்தினால் நிறைந்திருக்கிறது. எந்தவொரு விசுவாசியும் திறந்த வேதாகமத்தில் இயேசுவை, வார்த்தையை தேடாமல் இருந்தால் , வாழ்வில் நன்மையை பெற்றுக்கொள்ளமுடியாது. யார் யாரெல்லாம் வார்த்தையில் நிலைத்திருக்கிறீர்களோ, நீங்கள் கேட்பதை உங்களுக்கு இயேசு அருளிச்செய்வார். நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் என்பது அவருடைய வாக்காய் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

