சந்தோஷத்தில் நிலைத்திருங்கள் (Remain in the Joy ).

யோவா 15 : 11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/KoYASesHSTw

கிறிஸ்து இயேசுவின் சந்தோஷத்தில் நிலைத்திருப்பது என்பது, பரலோகத்தில் நாம் பெறப்போகும் கிரீடங்கள், பரிசுகளை நினைத்து சந்தோஷப்பட்டு, இந்த பூவுலகில் நாம் சந்திக்கும் அவமானங்கள், நிந்தைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் வாழ்வதாகும். சந்தோஷத்தை பெரும்பாலும் உபத்திரவம், பாடுகள் போன்றவற்றோடு சம்பந்தப்படுத்தியே வேதாகமம் பேசுகிறது. மலைப் பிரசங்கத்தில் இயேசு பேசியதைப் பாருங்கள். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள் என்று மத் 5:4 இல் இயேசு கூறினார். யோவா 16:33 இல் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யூதர்கள் பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள் என்று அப் 13:50 கூறுகிறது. அதன்பின்பு, அப் 13:52 இல் சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள் என்று சந்தோஷத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

இந்த வசனங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், வாழ்க்கை என்னும் பிரயாணத்தில் வரும் சோதனைகள், துன்பங்கள், பாடுகள் நடுவில் கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் சந்தோஷத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணுகிறேன் (பிலி 1:4) என்றும், கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலி 4:4) என்றும் பவுல் எழுதியுள்ளார். பவுல் சிறையில் இருந்தபோதுதான் பிலிப்பியர் நிருபத்தை எழுதினார். அக்கால ரோமச் சிறைகள் எலிகள், கொசுக்கள் மற்றும் ஊர்ந்து செல்லும் பூச்சிகள் நிறைந்த இருண்ட அறைகளாக இருந்தது; அங்கு கைதிகள் தரையில் தூங்க வேண்டியிருந்தது, அவர்களுக்கு மிகக் குறைந்த உணவே வழங்கப்பட்டது. அவர் எத்தகைய சிறையில் இருந்திருந்தாலும், அந்தச் சூழல் நிச்சயமாக மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்க முடியாது. இருப்பினும், அத்தகைய கடினமான சூழலிலும் பவுல் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார். சூழ்நிலைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்போது சந்தோஷமாய் இருப்பது எளிது; ஆனால், கடினமான சூழ்நிலைகளில் அதைப் பற்றி யோசிப்பதே முற்றிலும் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு கிறிஸ்தவர் சந்தோஷத்துடன் இருக்க முடியும் என்பதை பவுலின் வார்த்தைகள் நமக்குக் கற்பிக்கின்றன.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவுதான் சந்தோஷத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார். குறிப்பாக உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். இன்னும் சில மணிநேரங்களில் அவர் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு குற்றவாளியைப் போல பகிரங்கமாகச் சிலுவையில் அறையப்படவிருந்தார். அப்படியிருந்தும், அவர் மற்றவர்களுடன் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். ஆகையால் அவருடைய சந்தோஷத்திற்குள் நிலைத்திருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *