முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் (It is hard to kick against the pricks)

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார் (அப். 9:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gPPTBlmQDE0

அப்போஸ்தலனாகிய பவுல், இயேசுவால் சந்திக்கப்படுவதற்கு முன்பு சவுலாய் காணப்பட்ட நாட்களில், முதல் தலைமுறை  கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்பப்படுத்துகிறவனாய் காணப்பட்டான். அவனுடைய துன்புறுத்துதல்கள் எருசலேமில் மட்டுமல்ல, அங்கிருந்து சுமார் 200 மைல் தொலைவில் காணப்பட்ட தமஸ்குவிலும் தொடர்ந்தது. அவன் தமஸ்குவுக்கு போகும் வழியில் இயேசு அவனைச் சந்தித்தார். அப்போது நீர் யார் என்று சவுல் கேட்ட வேளையில் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்று இயேசு கூறினார். முட்களுக்கு எதிராக உதைப்பது உனக்குக் கடினமானது என்பது ஒரு கிரேக்க பழமொழியும் கூட. இது யூதர்களுக்கும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருந்தது. நிலத்தை உழும் போது காளைகளை வழிநடத்த ஒரு முனையில் கூர்மையான இரும்பு முள் பொருத்தப்பட்ட கோல் பயன்படுத்தப்பட்டது. விவசாயி அந்தக் காளையைச் சரியான திசையில் செலுத்த அதன் உடலில் அந்த முள்ளால் குத்துவார். சில சமயங்களில் அந்தக் காளை அந்த முள்ளுக்கு எதிராக உதைத்து எதிர்ப்பு தெரிவிக்கும்; அவ்வாறு செய்யும்போது அந்த முள் அதன் உடலில் இன்னும் ஆழமாகச் சென்றுவிடும். சுருக்கமாகச் சொன்னால் காளை எவ்வளவு அதிகமாக எதிர்க்கிறதோ அவ்வளவு அதிகமாக அது துன்பத்திற்கு உள்ளாகும். இதனால்தான் தமஸ்கு செல்லும் வழியில் சவுலிடம் இயேசு “முட்களுக்கு எதிராக உதைப்பது உனக்குக் கடினமானது” என்று கூறினார். 

ஆண்டவருடைய இந்த வார்த்தைகள் சவுலுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது. சவுல் கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துகிறதாக நினைத்தான், ஆனால் அது இயேசுவாகிய என்னையே துன்பப்படுத்துவதற்குச் சமம் என்று ஆண்டவர் கூறினார். இந்நாட்களில் அனேக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பலவிதங்களில் உபத்திரவங்களை அனுபவிக்கிறார்கள். கிறிஸ்தவ நாடுகளிலும் கூட பலவிதமான நெருக்கங்கள் காணப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உபத்திரவப் படுத்துகிறார்களோ, அவர்கள் மனம்திரும்பாத பட்சத்தில், அது அவர்கள் வாழ்க்கையில்   அதிக வேதனையையும், சடுதியான அழிவையும் கொண்டுவரும். ஆண்டவர் கூறினார், இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும என்பதாக.

அனேகக் கிறிஸ்தவர்களும், ஊழியர்களும் கூட இந்நாட்களில் ஒழுக்கமற்றவர்களாகவும், மாம்சீக பாவங்களில் விழுகிறவர்களாகவும், பண ஆசை பிடித்து இழிவான ஆதாயத்தைத் தேடுகிறவர்களாகவும், உண்மையில்லாதவர்களாகவும், காணப்படுகிறார்கள். அவர்களுக்கும் ஆண்டவர் கூறிய பழமொழி பொருந்தும். அவர் எல்லாவற்றையும் நியாபகப் புஸ்தகத்தில் எழுதி வைக்கிறவர், கணக்கு கேட்கிற எஜமான் அவர். ஆண்டவர் பலமுறை உணர்த்தியும் தொடர்ந்து துன்மார்க்கமான வாழ்வு வாழ்கிறவர்களைக் கர்த்தர் விசாரிப்பார். இப்படிப்பட்டவர்களும் மனம்திரும்பாத பட்சத்தில் கர்த்தருடைய கோபாக்கினையை சந்திக்க வேண்டியது வரும். ஆகையால், கர்த்தருடைய சொந்த ஜனமாய்க் காணப்படுகிற நீங்கள் பயபக்தியோடும், பரிசுத்தத்தோடும் வாழ உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது அவருடைய நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம் உங்களைத் தொடரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae