புதிய வானமும், புதிய பூமியும் (New Heavens and New Earth):-

II பேதுரு 3:13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Br9p1NfWFX8

நாம் இப்பொழுது வாழ்கிற இந்த பூமியும், காண்கிற வானமும் ஒருநாள் காணாமல் போய்விடும். இவைகளெல்லாம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. சபையை சேர்த்துக்கொள்ள இயேசு வானங்கள் மீது திடீரென்று வருவார். சபை மகிமையில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்பின்பு இந்த உலகம் மிகப்பெரிய பொல்லாங்கனுடைய கரங்களில் கொடுக்கப்படும். அவன் பெயர் அந்திகிறிஸ்து. அவன் ஆளுகை செய்யபோகிற ஏழு வருஷங்கள் மகா உபாத்திரவத்தின் காலங்களாக இருக்கும். அவனை பின்பற்றுபவர்களின் இலக்கம் 666. அவனுடைய அரசாட்சியின் ஏழு வருட முடிவில், இயேசு இராஜாதி இராஜாவாக வந்து பொல்லாத அந்திகிறிஸ்துவை வீழ்த்தி அவனையும், கள்ளத்தீர்க்கதரிசியையும் கந்தகம் எரிகிற அக்கினி கடலிலே உயிரோடு தள்ளிவிடுவார். ஒரு தூதன் பழைய பாம்பாகிய சாத்தானை சங்கிலிகளினால் கட்டி பாதாளத்தில் தள்ளியடைத்து விடுவான். அதன்பின்பு இயேசுவின் தலைமையில் ஆயிர வருட அரசாட்சி நடைபெறும். இயேசுவின் ஆட்சிக்காலத்தில் நாமும் ஆளுகை செய்கிறவர்களாக இருப்போம். ஆயிர வருட அரசாட்சின் முடிவில் சத்துரு கட்டவிழ்க்கப்படுவான். அப்பொழுது ஜனங்கள் யாரை பின்பற்றுவார்கள் என்பதை அறிய அவர்களுக்கு இன்னொரு தருணம் கொடுக்கப்படும். அப்பொழுதும் அநேகர் இடறி பொல்லாத சந்துருவை பின்பற்றி சோரம்போவார்கள். குறித்த வேளையில் இயேசு சத்துருவை அக்கினி கடலில் தள்ளி முடிவான நியாயத்தீர்ப்பை வழங்குவார்.

அதன் பின்பு நாம் காண்கிற வானமும் இந்த பூமியும் கடந்துபோகும். புதிய வானமும் புதிய பூமியும் இறங்கி வரும். நாம் அங்கே யுகா யுகமாக புதிய எருசலேமில் நம் இரட்சகராகிய இயேசுவோடு வாழ்வோம். அங்கே ஒரு வருத்தமும் ஒரு கண்ணீரும் இருக்காது. சாலொமோன் இராஜா சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது. சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள் (1 இராஜா 4:25). சாலொமோன் இராஜா ஆட்சி செய்யும்போதே ஜனங்கள் இவ்வளவு சுகமாய் இருந்திருப்பார்களென்றால், நம்முடைய பரலோக இராஜா ஆயத்தம் பண்ணியிருக்கும் புதிய எருசலேமில் வாழும்போது நாம் எவ்வளவாய் இளைப்பாறி சுகமாய் தங்கியிருப்போம் என்று யோசித்துப்பாருங்கள்.

நாம் வாழ்கிற இந்நாட்களில் புதிய எருசலேமை நோக்கி, புதிய வானம், புதிய பூமியை நோக்கி நம்முடைய கண்கள் பதிக்கப்பட்டவைகளாய் காணப்படட்டும். யாக்கோபு இந்த பூவுலகில் வாழும்போதே வானத்தின் வாசலை கண்டான். அதுபோல நம்முடைய இந்த குறுகிய வாழ்நாட்களில், நம்முடைய இல்லங்கள், சபைகள் எல்லாம் வானத்தின் வாசலாக மாறட்டும். நாத்தான்வேலை பார்த்து இயேசு சொன்னார், இன்னும் பெரிதானவைகளை காண்பாய் என்று. என்ன காரியத்தை குறித்து அவனோடு இயேசு சொன்னார். வசனம் சொல்லுகிறது பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (யோவான் 1:51). இயேசுவின் இந்த அனுபவமே நம்முடைய அனுபவமாக இப்பூவுலகில் மாறட்டும். வானத்தின் வாசலாக, தேவ தூதர்கள் ஏறுகிறவர்களாகும் இறங்குகிறவர்களாகவும் நம்முடைய ஜெப நேரங்கள் மாறட்டும். புதிய வானம், புதிய பூமியை நோக்கி காத்திருப்போம். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் என்ற வசனத்தின்படி புதிய வானம் புதிய பூமியை சுதந்தரித்துக்கொள்ளுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar