தேவையை அறிந்தவர்(God knows your needs):-

லூக்கா 8 : 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EsMew272aNU

யவீரு என்ற ஜெப ஆலயத்தலைவனுக்கு 12 வயதில் ஒரு இளம் வாலிப மகள் இருந்தாள். திடீரென்று அவள் மரண தருவாயில் மரண அவஸ்தை பட்டாள். அவளுக்கு இயேசு ஒருவர் தான் சுகத்தை தர முடியும் என்பதை அறிந்த யவீரு இயேசுவிடம் வந்து அவன் மகள் சொஸ்தமாக அவரை வீட்டுக்கு வரும்படியாக அழைத்தான்.

போகிற வழியில் இயேசு 12 வருடமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீயை குணமாக்கினார். பெரும்பாடுள்ள ஸ்திரி மரண அவஸ்தை படவில்லை; மாறாக யவீருவின் மகள் தான் மரண அவஸ்தை பட்டாள். இயேசு நினைத்திருந்தால் முதலாவது, மனிதர்களாகிய நாம் நினைக்கிறவண்ணமாக, மரண அவஸ்தைப்படுகிறவளை குணப்படுத்தின பின்பு பெரும்பாடுள்ள ஸ்திரீயை குணப்படுத்தியிருக்கலாம். ஆனால் இயேசு அப்படி செய்யவில்லை. தன்னை தேடி வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாதவர் அவர்.

இயேசு இப்படியாக தாமதித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு செய்தி வந்தது. என்ன செய்தியென்றால் யாவீருவின் மகள் மரித்து போய்விட்டாள் என்பதாக. இயேசு சொன்னார் விசுவாசத்துடன் இரு அவள் பிழைப்பாள் என்பதாக. அவள் இருக்கும் வீட்டிற்க்கு போனார்; அவிசுவாசிகளை அவ்விடம் விட்டு துரத்தினார்; விசுவாசிகளான பேதுரு, யாக்கோபு, யோவானோடு கூட மரித்தவள் தாய் தகப்பனையும் கூட்டிக்கொண்டு உடல் அருகில் சென்றார். இயேசு சொன்னார் அந்த சரீரத்தை பார்த்து மகளே எழுந்திரு என்று. உடனே மரித்தவள் எழுந்து உட்கார்ந்தாள்.

மரித்தவள் எழுந்துவிட்டாள் என்பதை பார்த்த தாய் தகப்பனுக்கு ஒரே சந்தோசம், ஒரே மகிழ்ச்சி, அவர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருந்ததினால் அவர்கள் மகளுக்கு அடுத்து என்ன தேவை என்பதை அறிந்துகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் இயேசு அந்த மகளுக்கு பசிக்கும் என்பதை அறிந்து மகளுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்றார். உலகத்திலிருக்கும் பெற்றோருக்கு இல்லாத ஒரு கரிசனை.

நம் ஆண்டவர் ஏதோ அற்புதத்தை செய்துவிட்டு அப்படியே போய் விடுகிறவர் அல்ல. அடுத்து நம்முடைய வாழ்வில் என்ன வேண்டுமென்பதை அறிந்து செய்துகொடுக்கிறவராக இருக்கிறார்.

யாருக்கும் உங்கள் தேவை என்ன என்று புரிந்துகொள்ளமுடியவில்லை என்று நினைக்கிறீர்களா. கரிசனையுள்ள இயேசுகிருஸ்து உங்கள் தேவைகளெல்லாம் அறிந்து அதை செய்து கொடுப்பார். யவீருவின் மகள் பசியாய் இருப்பதை அறிந்தவர், உங்கள் பசியை அறியாமலிருப்பாரா? நிச்சயமாக அறிந்து தேவையை சந்திப்பார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org