செவ்வையான வழி (Safe Journey):-

எஸ்றா 8:21. அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fY27etqndWY

மோசே நாற்பது நாட்கள் ஒன்றும் புசியாமல் தேவனுடைய செம்மையான திட்டத்திற்காக காத்திருந்து பத்து கட்டளைகளை பெற்றுக்கொண்டு வந்தான். ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம், பாவம் அக்கிரமங்களிலிருந்து விடுபட, உபவாசிப்பது தான் எனக்கு உகந்தது என்று ஆண்டவர் கூறினார். யோவேல் தீர்க்கதரிசியின் மூலம் உபவாசத்துடன் மனம்திரும்ப வேண்டும் என்று ஆண்டவர் கூறினார். இயேசு நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து சாத்தானின் சகல சோதனைகளையும் மேற்கொண்டார். அன்னாள் என்ற எண்பத்து நான்கு வயதுள்ள விதவை இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தாள். அதுபோல எஸ்றா மூலமாக ஆவியானவர் தாழ்மையாய் இருப்பதற்கும், செவ்வையான வழியில் நடப்பதற்கும் உபவாசம் இருக்க சொல்லுகிறார்.

வாழக்கை என்னும் பிரயாணத்தில் செவ்வையான வழியில் பயணம் செய்ய வேண்டும் என்று எல்லாரும் விருப்பப்படுவார்கள். அப்படியாக தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்துவதற்கும், செவ்வையான வழியில் கர்த்தர் உங்களை நடத்துவதற்கும் மூன்று முக்கியமான காரியங்களுக்காக உபவாசம் இருந்து ஜெபிக்க வேண்டும்.

முதலாவதாக உங்களுக்காக உபவாசம் பண்ணுங்கள். கணவன் மனைவியாக ஒரே சரீரமாக இணைந்து குடும்ப வாழக்கையில் தேவனுடைய திட்டம் நிறைவேறவும், சகரியா எலிசபெத் தம்பதியை போல ஆண்டவருக்கு உகந்த குடும்பமாக இருக்கும்படியாகவும், உபவாசம் இருந்து ஜெபியுங்கள். இரண்டாவது, உங்கள் பிள்ளைகளுக்காக உபவாசம் இருந்து ஜெபியுங்கள். பிள்ளைகளுடைய எதிர்காலம் கர்த்தருடைய கரத்தில் பத்திரமாக இருக்கவும், மறைவான கன்னிகளுக்கு பிள்ளைகள் தப்புவிக்கப்படவும், எதிர்கால துணைக்காகவும், நேர்வழியில் கர்த்தர் அவர்களை நடத்தும்படிக்காகவும் அவர்களுக்காக உபவாசம் இருந்து கர்த்தரிடம் ஜெபியுங்கள். மூன்றாவதாக, சகல பொருட்களுக்காகவும் உபவாசம் இருங்கள். குடும்பத்திற்கு, பிள்ளைகளுக்கென்று உபவாசம் இருப்பது நம்முடைய வழக்கம். அதேவேளையில் கர்த்தர் நமக்கு கொடுத்த பொருட்களுக்காகவும், கொடுக்கப்போகிற பொருட்களுக்காகவும் உபவாசம் இருந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வீடு, வாகனம், நிலம், பொன், ஆடை, வீட்டிலிருக்கும் அணைத்து விதமான பொருட்களுக்காகவும் கர்த்தரிடம் உபவாசம் இருந்து ஜெபியுங்கள்.

அப்பொழுது கர்த்தர் உங்களை செவ்வையான வழியில் நடத்துவார். கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும் (சங் 5:8) என்றும், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் (சங் 143:8) என்று சங்கீதக்காரன் ஜெபித்ததுபோல கர்த்தர் உங்களை செவ்வையான வழியிலே நடத்துவார். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும், உங்களுடைய எல்லா பொருட்களுக்காகவும் உபவாசம் இருந்து ஜெபியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org