விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்(All things are possible for those who believe).

இயேசு அவனை நோக்கி, நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு 9:23.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tx-XQzz3aFg

ஜனக்கூட்டத்தின் நடுவே ஒருவன் இயேசுவை நோக்கி போதகரே ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன் அந்த ஆவியை துரத்திவிடும்படி உம்முடைய சீஷர்களிடம் கேட்டேன் ஆனாலும் அவர்களால் கூடாமற் போயிற்று என்றான். உடனே இயேசு தனது சீஷர்களை கடிந்துக்கொண்டு அந்த அசுத்த ஆவிபிடித்தவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று சொல்லி அவன் தகப்பனை நோக்கி இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலம் ஆயிற்றென்று கேட்டபோது இது சிறுவயதுமுதற்கொண்டே அவனை வேதனைப்படுத்துகிறது என்று சொல்லி எங்கள் மீது மனதிரங்கி உதவிசெய்யுங்கள் என்று கேட்டவேளையில் இயேசு சொன்ன வார்த்தை நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னபோது இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி, ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதட்டினார், அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று.

பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள். இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
(லூக்கா 5:12) இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார், உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

நாம் விசுவாசிகளாய் இருந்தும்கூட அநேக வேளையில் கிறிஸ்துவை விசுவாசியாமல் மறுதலித்துவிடுகிறோம். அவர் நம்மை அபிஷேகித்திருக்கிறார், பிசாசின் வல்லமையை மேற்கொள்வதற்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். இருப்பினும் இது நடக்குமோ? நடக்காதோ? என்ற அவிசுவாசமான சிந்தை நமக்குள் காணப்படுகிறது. சீஷர்கள் இயேசுவோடு கூடவே இருந்து அவருடனே சாப்பிட்டு அவரோடு கூட நடந்து அவர் செய்த அநேக அற்புதங்களை கண்ணாரப் பார்த்து காதாரக் கேட்டிருந்துங்கூட அநேக வேளைகளில் அவரை விசுவாசியாமல் போனார்கள். சில நாட்களுக்கு முன்புதான் தன்னுடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்(லூக்கா 9:1-2). இவ்வகையான அதிகாரத்தை பெற்றிருந்தும்கூட அவர்களால் பிசாசுகளை துரத்தக்கூடாமல் போயிற்று காரணம் தமது இருதயக் கடினத்தினிமித்தம் இது நடக்குமோ? நடக்காதோ? நாம் பிணியாளிகளை சொஸ்தமாக்க கூடுமோ? கூடாதோ? என்கிற சிந்தனைகளும் அவிசுவாசமும் அவர்களுக்குள்ளாய் காணப்பட்டது. இதனால் இயேசு அவர்களை விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே என்று கடிந்துக் கொள்கிறதை பார்க்கிறோம் (லூக்கா 9:41).


தேவப்பிள்ளையே! இந்த உலகத்தில் எத்தனையோ மருத்துவ வசதிகள் இருக்கலாம், பலத்துறைகளில் மருத்துவர்கள் திறமையுள்ளவர்களாக செயல்படலாம், இருந்தும் அனேகரை கைவிட்டுவிடுகிறார்கள். இனி நீ பிழைக்க வழியே இல்லை என்று சொல்லுவார்கள், உன் வியாதி மாறாது, உன் வாழ்க்கை முடியப்போகிறது என்றெல்லாம் சொல்லுவார்கள். இன்று உங்கள் வாழ்க்கையை  விசுவாசத்தோடு தேவனிடத்தில் ஒப்புக்கொடுங்கள், அவரே நல்ல பரிகாரி அவருடைய தழும்புகளால் சுகமாவீர்கள். அவர் செட்டைகளின் கீழ்வருகிற ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு உண்டு. எந்த உலகத்தினர்களாலும்,மருத்துவர்களினாலும் செய்யக்கூடாதது, என் தேவனால் மாத்திரமே செய்யக்கூடும், அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் உங்கள் துக்கங்கள், கண்ணீர்கள்,பிரச்சனைகள்,வியாதிகள், வேதனைகள் எல்லாம் மாறும். நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் வியாதியாய் படுத்திருக்கும் போது ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள் அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான் என்று விசுவாசத்தோடு மன்றாடின வேளையில் அந்த வேலைக்காரன் சுகமனான்.  நாம் தேவனிடத்திலே விசுவாசத்தோடு எவைகளைக் கேட்டாலும் கொடுக்கிற கர்த்தர். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்,(மத்தேயு 7:7). இந்த வேலையில் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு உங்களை ஒப்புக்கொடுத்து கேளுங்கள் அப்பொழுது அவர் சகல ஆசீர்வாதங்களோடு உங்களை உயர்த்தி பெறுகச்செய்வார். ஆமென்

நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்.

கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. ஆமென்


David. P
Word of God Church
Doha- Qatar