சகவுறவுகளோடு ஒப்புரவாகுங்கள் (Make peace with fellowships).

மத் 5:23,24 ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8EaExmvOTKQ

பலிபீடத்திற்கு வருவது என்பது தொழுகையை, ஆண்டவரை ஆராதிப்பதை குறிக்கிறது. முதலாவது நம்முடைய சகோதர சகோதரிகளிடம் குறை இருக்குமென்றால் அதை சரி செய்துவிட்டு, ஒப்புரவாகிவிட்டு, காணிக்கையை செலுத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். இன்று அநேக நேரங்களில் உடன் விசுவாசிகளுடன் கோபம், கசப்பு, வைராக்கியம், பொறாமை, குற்றம் கண்டுபிடிக்குதல் போன்ற உள்ளுணர்வோடு, ஆண்டவரிடம் வந்து கரங்களை உயர்த்தி ஆராதிப்பது என்பது ஆண்டவருடைய பார்வையில் ஏற்புடையதல்ல என்பதை தேவ ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சபை என்பது ஒரே சரீரம். உங்கள் கை, உங்கள் கண்ணை பார்த்து நீ வேண்டாம் என்று சொல்லுவது கூடாத காரியம். அதுபோல உங்கள் கால், உங்கள் மூக்கை பார்த்து நீ நன்றாக இல்லை என்று சொல்ல முடியாது. அதுபோல தான் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளிடம் ஒருபோதும் கசப்போடு இருந்து, ஆண்டவருடைய சமூகத்தில் வந்து ஆண்டவரே ஆண்டவரே என்று கூப்பிடுவது ஆண்டவருடைய பார்வையில் மாய்மாலமாக இருக்கும்.

ஆண்டவரை தொழுதுகொள்ளுவோரின் வரிசையில் முதலாவது வந்தவன் காயீன் தான். நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே (1 யோவா 3 :11,12) என்று வசனம் கூறுகிறது.
காயீன் தன் சகோதரன் ஆபேலுடன் நல்லுணர்வை வைத்துக்கொள்ளாததினிமித்தம் தான் ஆண்டவர் அவனை புறக்கணித்தார்.

மாத்திரமல்ல, தன்னுடைய சகோதர சகோதரியை பகைக்கிறவன் கொலையாளி என்றும் வேதம் கூறுகிறது. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள் (1 யோவான் 3:15) என்று வசனம் கூறுகிறது. ஒருவேளை மாம்சீக பிரகாரமாக மற்றவர்களை கத்தியை வைத்து குத்தியோ, அடித்தோ கொலை செய்யாவிட்டாலும், வசனத்தின்படி, சகோதர சகோதரர்களை பகைக்கிறவர்களே கொலையாளிகள் என்று வேதம் கூறுகிறது. அப்படியென்றால், நம்மில் எத்தனை பேர் கொலை செய்த இரத்தம் படிந்த கரைகளோடு, கைகளை உயர்த்தி ஆராதித்துக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆராதனையில் பயன் என்ன? ஆண்டவர் அப்படிப்பட்ட ஆராதனையை வீண் என்று சொல்லுகிறார். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது (ஏசா 1:15) என்று கர்த்தர் சொல்லுகிறார். கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன் (1 தீமோ 2:8) என்று பவுல் சொல்லுகிறதை பார்க்கிறோம். ஆகையால் ஆண்டவரை ஆராதிக்க வரும் முன் சகோதர சகோதரிகளுடன் இருக்கும் பகைகளை ஒழித்து, அவர்களோடு ஒப்புரவாகி, பரிசுத்த கரங்களை உயர்த்துங்கள். அதுவே கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org