சிலுவையிலறையப்பட்ட இயேசுவா? இல்லை வேறொரு இயேசுவா? (Crucified Jesus or another jesus).

I கொரிந்தியர் 2:2 இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RH7IVCFrMn0

சிலுவையிலறையப்பட்ட இயேசுவை குறித்து மாத்திரமே பிரசங்கித்து வந்த பவுல் சொல்லுகிறான் எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கிப்பான்(2 கொரி 11:4) என்பதாக. பெந்தேகோஸ்தே அனுபவத்தோடிருந்த கொரிந்து சபை வேறொரு இயேசுவை விசுவாசிக்கும் அபாயத்தில் இருந்தனர். யார் இந்த வேறொரு இயேசு?

இயேசுவின் மரணத்தை சுமக்க செய்யும் சிலுவை உபதேசத்தை விட்டு இலகுவான போலி சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறதென்றால் அது வேறொரு இயேசுவை குறித்து பிரசங்கிக்கிறார்கள் என்பதை தேவ ஜனம் அறிந்துகொள்ள வேண்டும். மக்களை பாவ மன்னிப்பு பெறுவதற்கு அழைத்து விட்டு, சிலுவையை எடுத்து இயேசுவை பின்பற்றும் அவசியத்தை வற்புறுத்தாத சுவிசேஷம் தான் வேறொரு இயேசு.

பாவங்களை விட்டு ஓய்ந்திருக்க செய்யும் இயேசுவின் மரணத்தை பிரசங்கியாமல் சிலுவையில்லாத வேறொரு இயேசுவை பிரசங்கிக்கிற ஊழியக்காரர்களை பார்ப்பீர்களென்றால் அவர்கள் பிரசங்கித்து வருவது வேறொரு இயேசுவை. பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தாமல் வெறும் கிருபை, ஆசீர்வாதம், செழிப்பு இவற்றை மாத்திரமே பிரசங்கித்து வருபவர்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள். எவ்வளவு பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் காரணம் இயேசுவின் கிருபை பெரியது என்று சொல்லக்கூடிய ஊழியக்காரர்களுக்கு விலகு ஓடுங்கள். அவர்கள் பிரசங்கித்து வருவது வேறொரு இயேசுவை. வசனம் சொல்லுகிறது தேவ கிருபையை பெற்று வாழ்பவர்களை பாவம் மேற்கொள்ளமாட்டாது என்பதாக.

உலகத்தை வெறுக்க செய்யும் இயேசுவின் மரணத்தை விட்டு, இன்றைக்கு உலகத்தோடு ஒத்துப்போகும் சுவிசேஷம் வருகிறதென்றால் அது வேறொரு இயேசு என்பதை அறிந்துகொள்ளுங்கள். வங்கி கணக்கில் பணம் வருகிறது என்றெல்லாம் சொல்லி அநேக ஊழியக்காரர்கள் வஞ்சிப்பார்களென்றால் அது வேறொரு இயேசு. இயேசு சொன்னார் ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் (மத் 16:24) என்பதாக.

இடுக்கமான வாசல் வழியாக பிரவேசிக்க கற்றுக்கொடுக்காத சுவிசேஷம் அது வேறொரு இயேசுவை வெளிப்படுத்தும். எப்படியும் வாழலாம், வாழ்ந்து பரலோகத்திற்கு கடந்து செல்லலாம் என்று கேள்விப்படுவீர்களென்றால் ஜாக்கிரதையாய் இருங்கள். அப்படிப்பட்ட சுவிசேஷம் வேறொரு இயேசுவை வெளிப்படுத்துகிறதாய் காணப்படுகிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் அவனுக்குள்ளாக ஒரு தீர்மானம் பண்ணியிருந்தான். அது இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை குறித்து மாத்திரமே அறியவேண்டும், பிரசங்கிக்க வேண்டும் என்பதாக. நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு சிலுவையில் தொங்கினார், நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு சிலுவையில் அந்தகேடடைந்தார். சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினைத்தீர்ப்பு அவர் மேல் வந்தது. ஆகையால் தான் பவுல் சொல்லும்போது கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா 2:20) என்பதாக.

சிலுவையிலறையப்பட்ட இயேசுவைக்குறித்து மாத்திரம் அறிந்துகொள்ள இந்நாட்களில் தீர்மானம் எடுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org