இருதயமாகிய நல்ல பொக்கிஷம் (Good treasure of the heart):-

மத்தேயு 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qCLpMRzFNaI

ஒரு மனிதனுடைய சரீரத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு இருதயம். நம்முடைய இருதயத்திலிருந்து இரண்டு விதமான சுபாவங்களுக்கு இடம் கொடுக்க அனுமதிக்க கூடாது. ஒரே வீட்டில் இஸ்மவேலும் ஈசாக்கும் இருக்க முடியாது. அதுபோல ஒரே இருதயத்தில் கசப்பான தண்ணீரும், தித்திப்பான தண்ணீரும் சுரக்க முடியாது. உலகத்திற்கும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முடியாது. ஆகையால் தான் வேதம் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறதாய் காணப்படுகிறது.

தானியேல் என்ற இளம் வாலிபன் நாடு கடத்தப்பட்டான். புதிதாக வந்த நாட்டில் ஒரு காரியத்தினாலும் தான் தீட்டுப்படுத்தப்பட கூடாது என்று முதலாவது அவன் செய்த காரியம் என்னவென்றால், அவன் இருதயத்தில் ஒரு தீர்மானம் எடுத்தான். தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டான் (தானி 1:8) என்று வசனம் கூறுகிறது. முதலாவது அவன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினான், பின்பு தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்(தானி 1:9). இன்று அநேகர் ஆண்டவரிடம் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி மாத்திரம் அவரை தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் உதவி செய்ய முடியாது. முதலில் இருதயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும். என்னுடைய இருதயம் நல்ல பொக்கிஷமாக இருக்க வேண்டும்; என்னுடைய இருதயத்தில் ஜீவ ஊற்று மாத்திரம் புறப்பட்டு வர தீர்மானம் பண்ணுகிறேன்; என்னுடைய இருதயத்தில் கசப்புக்கோ, விரோதத்திற்கோ, பழிவாங்குதலுக்கோ இடம் கொடுக்க மாட்டேன் என்ற தீர்மானத்தை முதலாவது எடுங்கள். பின்பு ஆண்டவர் உங்களுக்கு வேண்டிய தயவும் இரக்கமும் கொடுப்பார்.

மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும் (ரோம 11:16) என்று வசனம் கூறுகிறது. வேராகிய இருதயம் பரிசுத்தமாய் இருந்தால், கிளைகளாகிய அணைத்து சரீர உறுப்புகளும் பரிசுத்தமாய் காணப்படும். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத் 5:8) என்று இயேசு மலை பிரசங்கத்தில் கூறினார். நம்முடைய இருதயம் எப்பொழுதும் நல்ல பொக்கிஷமாக காணப்படட்டும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வசனம் கூறுகிறது. நம்முடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மற்றவர்களை ஊன்ற கட்டட்டும். கிருபை நிறைந்த வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரட்டும். இருதயத்திலிருக்கிற இஸ்மவேலை துரத்துங்கள், ஈசாக்கு உள்ளே இருக்க அனுமதியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar