நானும், என் பிள்ளைகளும்(I, and the children).

இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் (ஏசாயா 8:18).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mI7BM8ttx8I

ஏசாயா தீர்க்கதரிசி, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும், இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம் என்று சாட்சி சொல்லுகிறதைப் பார்க்கமுடிகிறது. ஒருநாள் கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, ஒரு பத்திரத்தை எடுத்து, அதில் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார். அவன் தன் மனைவியாகிய தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்த போது ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்ற பெயரை ஏசாயா போட்டான். வேதத்தில் காணப்படுகிற எல்லா பெயர்களைக்காட்டிலும் இந்தப் பெயர் நீளமானது. அந்தப் பெயரின் அர்த்தம்,  துரிதமாய் அசீரியர்கள் தமஸ்கு, சமாரியாவை கொள்ளையிட்டு அபகரித்து அவர்களை மேற்கொள்ளுவார்கள். இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே அவைகள் நடக்கும். கிறிஸ்துவுக்கு முன்பு 732-ம் வருஷம் அப்படியே இந்த வார்த்தைகள் நிறைவேறினது. இதற்கு முன்பும் கர்த்தர் ஏசாயாவை நோக்கி, நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோங்கள் (ஏசாயா 7:3) என்று கூறினார். யூதாவின் ராஜாவாகிய ஆகாசுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை அறிவிக்கும்படிக்கு இரண்டு பேரும் இணைந்து ஊழியம் செய்வதைப் பார்க்கமுடிகிறது. ஏசாயாவும், அவன் மனைவியும், அவன் இரண்டு குமாரர்களும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தராலே,  இஸ்ரவேல் தேசத்தில்,  அற்புதங்களாகவும் அடையாளமாகவும் காணப்பட்டார்கள்.

இயேசுவும், இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்(எபி. 2:13), ஆகையால் மேலே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையானது இயேசுவைப் பற்றிய தீர்க்கத்தரிசனமாகவும் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தரும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், உலக ஜனங்கள் நடுவில் அற்புதங்களாகவும், அடையாளங்களாகவும் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஏசாயா தீர்க்கத்தரிசி ஆகாசுவிடம் ஒரு அடையாளத்தைக் கேள் என்று சொன்ன வேளையில், நான் கேட்கமாட்டேன் கர்த்தரைப் பரீட்சிக்கமாட்டேன் என்று கூறினான். ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசாயா 7:14) என்று கூறினான். சிமியோன் என்ற தீர்க்கதரிசியும் இயேசு பாலகனை கையிலேந்தி, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் (லூக்கா 2:34) என்று கூறினான். அவருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாமும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் காணப்படவேண்டும். உலகம் நம்மில் சாட்சியின் வாழ்க்கையை எதிர்பார்க்கிறது, இயேசுவின் சாயலைக் காண விரும்புகிறது. நாம் பூமிக்கு உப்பாய் காணப்படுகிறோம், உலகத்தின் வெளிச்சமும் நாமே. இயேசுவின் அன்பையும்  மனதுருக்கத்தையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிற ஜீவியம் செய்ய நம்மை  இந்நாட்களில் நம்மை முழுமையாய் அர்பணிக்க வேண்டும்.

ஏசாயாவும், அவன் குடும்பமும் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் காணப்பட்டது போல நாமும் குடும்பமாய் காத்தரைச் சேவித்து, கர்த்தரை மகிமைப் படுத்தவேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். தனியொரு நபராய் மாத்திரமல்ல, குடும்பத்தின் தலைவன், தலைவி, பிள்ளைகள் எல்லோரும் இணைந்து, யோசுவாவைப் போல நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம், என்று  கூறி முழுமையாய் கர்த்தரைச் சேவிக்க நம்மை அற்பணிப்போம். கர்த்தருடைய நாமம் உங்கள் குடும்பத்தின் அத்தனை நபர்கள் மூலமும் மகிமைப்படுவதாக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar