உங்கள் கைகளின் கிரியைகள் வாய்க்கும்(Whatever you do shall prosper).

மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக் கொண்டபடியினால்,  கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான், அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று,  அவர்கள் தர்ஷீசுக்குப் போகக்கூடாமற்போயிற்று. (2 நாளா. 20:37).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tsdN756NwSk

யூதாவில் தோன்றின நல்ல ராஜாக்களில் யோசபாத்தும் ஒருவர்.  கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொணடது,  ஆகையால் அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு,  யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதிக்க அனேகரை நியமித்தான். அதனிமித்தம் கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்,  அவனுடைய கைகளின் கிரியைகளை வாய்க்கும்படிக்குச் செய்தார். நம்முடைய இருதயங்களும் கர்த்தருடைய வழிகளில் பிரியப்பட்டு. அவருடைய பிரமாணங்களின்படி செய்ய விரும்பும்போது கர்த்தர் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

சிலகாலம் சென்ற போது,  யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடே சம்பந்தங்கலந்து,  அவனோடு நட்பு பாராட்டினான். இஸ்ரவேலின் ஜனங்களை தன் மனைவியாகிய யேசபேலுடன் சேர்ந்து,  பாகாலை சேவிக்கும்படிக்குச் செய்தவன் இந்த ஆகாப். அவனுடன் நான்தான் நீர்,  என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள்,  உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்று கூறி ஐக்கியம் கொண்டான். மிகாயா என்ற கர்த்தருடைய தீர்க்கதரிசி  எச்சரித்தும் கூட,  கர்த்தருடைய வார்த்தையை ஆகாபுடன் இணைந்து புறக்கணித்தான். யுத்தத்தில் ஆகாப் மரித்த பின்பு,  யோசபாத் எருசலேமிற்கு திரும்பிவந்த வேளையில்,  யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு,  அவனைச் சந்தித்து,  ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று,  கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி,  தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்தில் காணப்பட்டது உண்டு என்றான். கர்த்தர் யோசபாத்தின் ஜீவனைத் தப்புவித்த பின்பு திரும்பவும்,  ஆகாபின் குமாரனாகிய அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான். அவனோடு இணைந்து தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்யதான்,  அதனிமித்தம் கர்த்தர் அவனுடைய  கிரியைகளை முறித்துப்போட்டார்,  அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று,  கரங்களின் கிரியைகள் பலனற்றதாக போனது.

கர்த்தருடைய பிள்ளைகள் யாரோடு தோழமையும்,  நட்பும் பாராட்டுகிறீர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்கவேண்டும். சிலவேளைகளில்,  கூடா நட்பு கேடாய் முடியும். அப்படிப்பட்ட ஐக்கியத்தின் நிமித்தம் கர்த்தர் உங்கள் கரங்களின் பிரயாசங்களை முறித்துப்போடுவார்,  காரியங்கள் வாய்க்காமல் போகும்படிக்குச் செய்வார். ஆகையால் தான் நாம் யாரோடு இணைந்து காரியங்களைச் செய்கிறோம் என்பது முக்கியம். தனிப்பட்ட வாழ்க்கையில்,  படிக்கும் காலங்களில்,  தொழில்களில்,  ஊழியத்தின் பாதைகளில் நம்முடைய தொடர்புகளும்,  நட்புகளும் யாரோடு காணப்படுகிறது என்பதில் நாம் கவனமாகக் காணப்படவேண்டும். தொடர்ந்து தோல்விகளும்,  வீழ்ச்சிகளுமாய் காணப்படுகிறதா? வாழ்க்கையில்  முன்னேற்றம் இல்லாமல் காணப்படுகிறதா? நம்முடைய தோழமைகள் யாரோடு காணப்படுகிறது,  யாரோடு இணைந்து காரியங்களை நடப்பிக்கிறோம் என்பதைச் சோதித்துப் பார்த்து,  நம்மைச் சரிசெய்யும் போது,  கர்த்தர் நம்முடைய கரங்களின் கிரியைகளை வாய்க்கப்பண்ணுவார்,  ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org