அன்பு எனக்கிராவிட்டால்(If I do not have love).

I கொரிந்தியர் 13:1. நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/T6nSUuu97F8

ஒரு விசுவாசி குடும்பத்திற்க்கு அநேக வருடங்கள் திருமணம் ஆகியும் குழந்தையில்லாமல் இருந்தது. சபையில் பார்த்தால் ஒரே அந்நியபாஷை தான், ஒரே ஆர்ப்பரிப்பு தான். ஆனால் வீட்டிற்கு சென்றால் மனைவியையும் மனைவியின் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தி, அவர்களுடைய இருதயத்தை துக்கப்படுத்திக்கொண்டும் வந்திருந்தார். அவரின் இந்த செய்கையை பார்த்த ஊழியக்காரர் நீ நன்றாக ஜெபிக்கிறாய், அந்நியபாஷையெல்லாம் பேசுகிறாய் ஆனால் நீ சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் பிரயோஜனமில்லாமல் இருக்கிறாய். காரணம் உன் சுபாவத்தில் கிறிஸ்துவின் அன்பு வெளிப்படவில்லை. நீ மனம் திரும்ப வேண்டும் என்று சொல்லி கடந்து சென்றார். இதை சிந்தித்த அந்த நபர் தன்னை சரிபடுத்திக்கொண்டு கர்த்தர் கொடுத்த இந்த பரீட்சையில் தேர்வாகும்படியாக எல்லாரிடமும் அன்பை வெளிப்படுத்தினார். சில நாட்களில் அவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைத்தது.

ஒரு ஊழியக்காரர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக காண்பித்து கொண்டிருந்தார். தன்னுடைய சபையிலும், தான் மற்ற சபைக்கு செல்லும்போதும் கர்த்தர் உனக்கு இதை செய்வார், அதை செய்வார், நீ கனடா தேசத்திற்கு போவாய் என்று தீர்க்கதரிசனமாக சொல்கிறேன், குறிப்பிட்ட நாளில் உனக்கு வேலை கிடைக்கும், குறிப்பிட்ட நாளில் நீ உயர்ந்த பதவிக்கு போவாய் என்று கள்ள தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தார். அதே ஊழியக்காரர், மற்ற நபர்கள் அவருடைய தவறுகளை சுட்டி காண்பிக்கும்போது அவர்களை காவல்துறையில் பிடித்து தர போவதாகவும், தன்னுடைய ஆள் பலத்தை காண்பித்து மிரட்டுபவராகவும் காணப்பட்டார். இப்படிப்பட்ட ஊழியக்கார்களுக்கு கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது அவர்கள் ஒன்றுமில்லை என்பதாக. நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை (1 கொரி 13:2).

ஒரு நபர் தான் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுக்கிறார்; இதினிமித்தம் தனக்கு செல்வாக்கு கூடும் என்ற நோக்கத்தில் அவர் இதை செய்கிறவராக காணப்படுகிறார். அதே வேளையில் தன்னுடைய தொழிலில் முன்னேற்றமடைய யாருக்கு என்ன கேடு உண்டானாலும் பரவாயில்லை என்று சொல்லி தொழில் முன்னேற்றத்திற்காக அநேகருடைய காலை வாரி விடுகிறவராக காணப்பட்டார். வசனம் சொல்லுகிறது எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை (1 கொரி 13:2) என்பதாக.

எல்லாரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் ஆண்டவருடைய விருப்பம். ஆகையால் யாரிடமும் உங்களுக்கு கசப்போ வெறுப்போ இருந்தால் அவர்களை மன்னித்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள். காரணம் வசனம் சொல்லுகிறது இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது ( 1 கொரி13:13).

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org