பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்(Do not fear,   I will help you).

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே,  நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன் (ஏசாயா 41:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/R5tE-QTGrJc

கர்த்தர் உங்களுக்குத் துணைநிற்கிறார்,  ஆகையால் பயப்படாதிருங்கள். கர்த்தர் பயப்படாதே என்று கூறுவது ஒருபுறம் கட்டளையாகவும் மறுபுறம் வாக்குத்தத்தமாகவும் காணப்படுகிறது. கவலைகளுக்கும் பாரங்களுக்கும்  இடங்கொடுக்கும் போது,  அதுவே  நம்மைப்  பயம்  கொள்ளும்  படிக்குச் செய்கிறது. எதிர்காலத்தைக் குறித்த பயங்கள்    அநேகரை கலங்கச் செய்கிறது.  இஸ்ரவேல்  ஜனங்கள்  வனாந்தரத்தில்  காணப்பட்ட வேளையில் தூரத்தில் காணப்பட்ட எகிப்தின்  வெள்ளரிக் காய்களுக்காகவும்  கோமட்டிக்காய்களுக்காகவும்  கவலைப்பட்டதினால் ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அருகில் பொழிந்துகொண்டிருந்த  தேனிட்ட பணியாரம் போல் காணப்பண்ட தேவ தூதர்களின் உணவாகிய மன்னாவின் மேன்மையை அறியாமல் போய்விட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளும்  சம்பவிக்காத  பலகாரியங்களைக் குறித்து ஊகித்து கவலைப் படுவதினால் ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம்மை உடுத்துவித்து,  போஷித்து நடத்திக் கொண்டிருக்கிற மேன்மையை உணராமல்,  வேறு  பலகாரியங்களைக் குறித்துப் பயந்து கலங்குகிறோம்.  யோபு  கூறும்போது நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது என்றார்,  ஆகையால் காரணமில்லாத பயங்களுக்கு இடம் கொடாதிருங்கள். அதுபோல கர்த்தர்  பயப்படாதிருங்கள் என்ற  வாக்குத்தத்தத்தையும்  நமக்குக் கொடுக்கிறார். குறிப்பாக ஏசாயா 41வது அதிகாரத்தில் 10முதல் 14ம் வசனங்களுக்குள் மூன்று முறை பயப்படாதே என்று கர்த்தர் கூறுகிறார்.  யாக்கோபு என்னும் பூச்சியே,  இஸ்ரவேலின் சிறுகூட்டமே,  பயப்படாதே,  என்று கர்த்தர் உங்களைப் பார்த்து உரைக்கிறார்.  ஆகையால் எந்த சூழ்நிலைகளிலும் பயப்படாதிருங்கள். நான் பயப்படும் நாளில் கர்த்தரை நம்பிடுவேன் என்ற சங்கீதக்காரனைப் போல எல்லா நிலைகளிலும் கர்த்தரில் திட நம்பிக்கையாயிருங்கள்.  யோசபாத் பயந்த வேளையில் காத்தரை நோக்கிப்பார்த்தான்,  ஆகையால் கர்த்தர் அவனை எல்லாப் பயத்திற்கும் நீங்கலாக்கி இரட்சித்தார்.

கர்த்தர் உங்களுக்குத் துணை நிற்கும் போது,   உங்கள் மேல் எரிச்சலாயிருக்கிற  யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள். உங்களோடு  வழக்காடுகிறவர்கள் நாசமாகி  ஒன்றுமில்லாமற்போவார்கள்.  உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய், உன்னோடே யுத்தம் பண்ணின  மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள் (ஏசாயா 41:11, 12). ஆமான் மொர்தேகாயின் மேல் எரிச்சலாயிருந்தான்,  ஆனால் நாட்கள் வந்தபோது கர்த்தர்  அவனை மொர்தெகாய்க்கு முன்பாக   தாழ்ந்து போகச் செய்தார்,  அவன் மொர்தெகாய்க்கு ஆயத்தப்படுத்தின தொழுவ மரத்தில் அவனே நாசமடைந்தான்.  அதுபோல உங்கள் மேல் எரிச்சலாயிருக்கிற  யாவரையும் உங்களுக்கு முன்பாக தாழ்ந்து போகும் படிக்குக் கர்த்தர் செய்வார். தொடருவேன்,  பிடிப்பேன்,  கொள்ளையாடிப்  பங்கிடுவேன்,  என் பட்டயத்தை உருவுவேன்,  என் கை அவர்களைச்  சங்கரிக்கும் என்று கூறி  பார்வோன்  இஸ்ரவேல்  ஜனங்களைப் பின் தொடர்ந்தான்,  ஆனால் கர்த்தர் அவருடைய  காற்றை வீசப்பண்ணினார்,  கடல் அவர்களை மூடிக்கொண்டது, திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள் என்று வேதம் கூறுகிறது.  கர்த்தர்                           உங்களுடைய  பட்சத்தில்   துணையாயிருக்கும்  போது உங்களோடு வழக்காடுகிறவர்களும்,  போராடுகிறவர்களும்,  யுத்தம் செய்கிறவர்களும் காணாமல் போகும் படிக்குச் செய்வார்,  ஆகையால்  பயப்படாதிருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar