நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் (If you were in my place).

உங்களைப்போல நானும் பேசக்கூடும், நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்,    நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக்கோத்து,    உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்(யோபு 16:4).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_Hyv89MpE_k

சில வேளைகளில் நாம் மற்றவர்களுடைய நிலைமையைப் புரிந்து கொள்ளுவதில்லை. அவர்கள் கடந்து செல்லுகிற பாதைகளை அறியாதவர்களாய் அம்புகளை எய்வது போல வார்த்தைகளை எய்து காயப்படுத்திவிடுகிறோம். அன்னாள் தன்னுடைய இருதயதுக்கத்தின் நிமித்தம் தேவாலயத்தில் சென்று மனக்கசந்து அழுதாள்,    ஆனால் ஆசாரியனாகிய  ஏலி அவள் துக்கத்தைப் புரிந்து கொள்ளாமல்,    மதுபான வெறி கொண்டவள் என்று நினைத்து அவளைக் கடிந்து கொண்டான். இயேசு சிலுவையில் உலக ஜனங்களின்  பாவங்களைச்  சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்  குட்டியாகத்  தொங்கினார்,    ஆனால் அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள்,    அவர்களுடைய பாவங்களுக்காகவும் இயேசு சிலுவையில் தொங்குகிறார்  என்பதைப்  புரிந்துகொள்ளாமல்,     தங்கள் தலைகளைத் துலுக்கி:  தேவாலயத்தை இடித்து,    மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,    உன்னை நீயே ரட்சித்துக்கொள்,    நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். யோபுவும்  கூட தேவனுக்குப்  பயந்து,    உத்தமனும்,    சன்மார்க்கனுமாய் ஜீவித்தவன்,    நீதியாய் காரியங்களை நடப்பித்தான்,    ஏழைகளுக்கு அதிகமாய் உதவிசெய்தான்.  ஆகிலும்  தேவனிடத்திலிருந்து  அனுமதிப் பெற்று சத்துரு அவனைச் சோதித்த வேளையில்,    அவனுடைய நண்பர்களால் கூட அதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆகையால் அவனிடத்தில் குறை கண்டுபிடித்து,    அவனுடைய மீறுதல்களும் மறைவான பாவங்களும்தான் அவனுடைய இந்த கடினமான நிலைமைக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்கள். அவர்களைப் பார்த்து யோபு கூறினான்,    நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்,    உங்களைப்போல நானும் பேசக்கூடும்,       உங்களுக்கு  விரோதமாக வார்த்தைகளைக்கோத்து,    உங்களுக்கு எதிரே என் தலையைத்  துலுக்கவுங்கூடும். ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத்  திடன்சொல்லுவேன்,    என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்(யோபு 16:5) என்பதாக. யோபு தன்னை,    அவன்  நண்பர்களிடத்திலிருந்து  வித்தியாசப்படுத்திக் காட்டுவதைப் பார்க்கமுடிகிறது. அவன் கடந்து சென்ற பாடுகளும்,    வேதனைகளும்  அவனைப் பக்குவப்படுத்தி அந்த நிலைக்கு அவனைக் கொண்டுவந்தது.

கர்த்தருடைய பிள்ளைகள் மற்றவர்களுடைய நிலைமையை அறியாதபடிக்கு வார்த்தைகளைக் கொட்டிவிடக் கூடாது. அடுத்தவர்களைக் குறைசொல்லுவதும்,     நியாயந்தீர்ப்பதும்  உங்களுடைய காரியமல்ல.  மனுஷர்  உங்களுக்கு  எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ,    அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்,    இதுவே நியாயப்பிரமாணமும்  தீர்க்க தரிசனங்களுமாம் என்று இயேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது,    தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் என்று வேதம் கூறுகிறது. உங்களுக்கு வருகிற உபத்திரவங்களில் தேவன் ஆறுதல் அளித்ததின் காரணம்,     மற்றவர்களுக்கு வருகிற உபத்திரவத்தில் நீங்கள் அவர்களுக்கு ஆறுதல்செயவதற்கு என்பதை மறந்து போகாதிருங்கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களை வேதனைப்படுத்தும் போது,    நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால் இப்படி  பேசியிருக்கமாட்டீர்கள் என்று யாரும் சொல்லுவதற்குக்  காரணமாகிவிடாதிருங்கள். அப்போது,    யோபுவின்  முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை அதிகமாய் ஆசீர்வதித்த தேவன்,    உங்களையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae