பவுலின் லட்சியம் (Paul’s Ambition):-

2 கொரி 5 :8,9 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1HqaVKpNGF4

நாமெல்லாருக்கும் வாழ்க்கையில் லட்சியமும் நோக்கமுமுண்டு. படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிப்பார்கள். இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கும். திருமணம் செய்வதற்கு முன்பாக நல்ல வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோள் காணப்படும். பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சொத்துக்களை சேர்த்து வைக்கவேண்டும் என்ற லட்சியம் காணப்படும். அரசியல் தலைவர்களுக்கு தாங்கள் பெரிய பதவிகளில், ஆளுமையில் இருக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படுவார்கள்.

இப்படியிருக்க பவுலின் நோக்கமும் லட்சியமும் இந்த சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க வேண்டும் என்பதையே தன்னுடைய குறிக்கோளாய் கொண்டு இந்த உலகத்தில் ஜீவித்தான். ஒரு ஊழியக்காரர் சொன்னார், நம்மில் எத்தனை பேர் சொல்ல முடியும் இப்பூவுலகில், இப்பொழுது என்னுடைய விருப்பம் எதுவாக இருக்கிறதோ, அதுவே நான் பரலோகத்தில் சென்ற பிறகும் என்னுடைய விருப்பமாக இருக்கும் என்பதாக. இந்த உலகத்தில் என்னுடைய சொந்த விருப்பங்களையே செய்து, பரலோகத்தில் சென்று தேவனுக்கு பிரியமானவைகளை செய்வேன் என்று சொல்லுபவர்கள், பரலோகத்தில் செல்ல முடியுமா என்பதே கேள்விக்குறி. ஆகையால் இந்த உலகில் வாழும்போதே தேவனுக்கு பிரியமானவைகளை செய்ய உங்களை ஒப்புக்கொடுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே உங்கள் சந்தோசமாக மாறட்டும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதிலும், தேவனுக்கு பிரியமான காரியங்கள் செய்வதிலும், காலம் தாமதிக்காமல், உடனே செவிகொடுத்து, கீழ்ப்படியுங்கள்.

பவுலை போல தாவீதும் தேவனுக்கு பிரியமாய் இருப்பதே தன்னுடைய நோக்கமாக கொண்டிருந்தார். தாவீது சொல்லுகிறார், உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக (சங் 143:10) என்பதாக. கோரேசை குறித்து ஆண்டவர் சொல்லுவார் அவன் எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் (ஏசா 44:28) என்பதாக. நாமும் பவுலை போல, தாவீதைப்போல, எப்பொழுதும் தேவனுக்கு பிரியமானவைகளை செய்வதே நம்முடைய குறிக்கோளாக, லட்சியமாக வைத்துக்கொள்ளுவோம்.

தேவனுக்கு பிரியமானவைகளை செய்யும்போது கர்த்தர் கொடுக்கும் ஆசிர்வாதம் என்னவென்றால், இயேசு சொன்னார், என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை (யோவா 8:29) என்பதாக. நீங்கள் பிதாவுக்கு பிரியமானவைகளை செய்யும்போது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியே இருப்பதில்லை. தேவன் உங்களோடு இருப்பார். அதுபோல, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1 யோவான் 3:22) என்ற வசனத்தின் படி, தேவனுக்கு பிரியமானவைகளை செய்யும்போது, நீங்கள் வேண்டிக்கொள்ளுவதை பெற்றுகொள்ளுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் நோக்கமும், லட்சியமும் தேவனுக்கு பிரியமாய் இருப்பதையே குறிக்கோலாய் வைத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org