பாவத்திற்கு விரோதமாக போராடுங்கள்(Struggle against sin).

எபி-12:4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/irrCiR6OqNI

பாவம் தண்ணீரைப் போலப் பெருகின காலகட்டத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தருடைய ஜனங்கள் பாவத்திற்கு விரோதமாகப் போராடவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஒருவேளை இரத்தம் சிந்தி எதிர்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் அப்படி செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது.

பாவம் என்றால் என்ன? தேவனுடைய நோக்கத்திலிருந்து நாம் தவறுவதாய் காணப்படுகிறது (Missing the mark). ரோம-3:23 கூறுகிறது, எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்.  தேவமகிமையை இழக்கச்செய்கிற, அவர் விரும்புகிற தரநிலையிலிருந்து தவறச்செய்கிற எல்லாக்காரியங்களும் பாவமாகக் காணப்படுகிறது.  பாவத்தை ஒருபோதும் பலகீனம் என்று சொல்லி நழுவப் பாராதிருங்கள். பாவத்தின் சம்பளம் மரணம், பாவம் செய்கிற ஆத்துமா சாகும், பாவம் உங்கள் வாசல் படியில் படுத்துக் கொள்ளும். பாவம் கொடிய விஷத்தைப்பார்க்கிலும் கொடூரமானது.

பினகாஸ் பாவத்திற்கு விரோதமாக எதிர்த்து நின்றான். இஸ்ரவேல் ஜனங்களை பிலேயமால் சபிக்கமுடியவில்லை. கர்த்தர் அவர்களோடு இருந்தார். அவர்கள் உலக ஜனங்களோடு கலவாமல் தனியே வாசம் பண்ணினார்கள். ஆனால், பாலாக்கிற்கு பொல்லாத ஆலோசனையை பிலேயாம் கொடுத்தான். மோவிபிய மற்றும் மீதியானிய குமாரத்திகளை இஸ்ரவேல் பாளையத்திற்குள்ளாக அனுப்பும்படிக்கு துர்ஆலோசனையைக் கொடுத்தான்.  பாலாக், அப்படி செய்த வேளையில், இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனத்திற்கும் விக்கிரக ஆராதனைக்கும் தங்களைவிற்றுப் போட்டார்கள். அந்த செய்கையானது தேவ கோபாக்கினையையும், பெரிய அழிவையும் இஸ்ரவேல் ஜனங்களுக்குள்ளாகக் கொண்டுவந்தது. வாதையினால் இருபத்தி நாலாயிரம் பேர் மரித்துப்போனார்கள்.   அந்தவேளையில் பினகாஸ் வைராக்கியமாய் கர்த்தருக்காக எழும்பினான். அவன் தன் தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பிததான், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தான், ஆகையால் அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை கர்த்தர் ஆசீர்வாதமாகக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, யாரும் நம்மைச் சபிக்கமுடியாது, பிசாசு கூட நம்மை மேற்கொள்ளமுடியாது. ஆனால், நம்முடைய பாவங்கள் நமக்குள், குடும்பத்திற்குள், சபைக்குள் பெரிய அழிவை கொண்டுவந்து விடும். இந்நாட்களில் சினிமாக்களும், சீரியல்களும், வலைத்தளங்களும், கள்ள ஆராதனைகளும் உபதேசங்களும் ஜனங்களைப் பாவத்திற்குள்ளாகத் தள்ளுகிறது. ஆனால், ஜனங்கள் விழிப்பின் ஜீவியம் செய்யாததினால் தாங்களாகவே தங்களை அழித்துக்கொள்ளுகிறார்கள்.  ஒருவன் உங்களிடத்தில் வந்து கர்த்தருடைய உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்,  அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் (2 யோவான் 1:10,11).

யோசேப்பு பாவத்திற்கு விரோதமாகப் போராடினான். வாலிப வயதிலும், பாமம் செய்வதற்கு ஓயாமல் தன் எஜமானுடைய மனைவியால் நித்தம் நித்தம் கவர்ச்சிக்கப்பட்டும், தேவனுக்கு விரோதமாகக் பாவம் செய்வது எப்படி என்று கூறி பாவத்தை விட்டு ஓடி ஒளிகிறவனாய் காணப்பட்டான். அதனிமித்தம் சிறைத்தண்டனையை அனுபவித்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்து பார்வோனுடைய அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தினார். கர்த்தருடைய பிள்ளைகளே, பாவம் செய்கிற சூழ்நிலைகளிலிருந்து விலகியோடுங்கள்.  பவுல், விசுவாசத்தில் தன் உத்தம குமாரனாகிய தீமத்தேயுவுக்கு எழுதும்போது, பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2 தீமத். 2:22) என்று ஆலோசனைக் கூறுகிறார். ஆகையால் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகிவிடுங்கள். பரிசுத்தத்தை பயபக்தியோடு காத்துக்கொள்ளுங்கள். அதற்குரிய கிருபைகளை கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar