சகலவிதமான ஆறுதலின் தேவன் (God of all comfort).

2 கொரி 1:3. நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JdUmENTJHjE

பவுல் பிதாவாகிய தேவனுக்கு சகலவிதமான ஆறுதலின் தேவன் என்ற ஒரு அடைமொழி பெயரோடு அழைக்கிறதை இந்த வசனத்தில் பார்க்கிறோம். தேவன் உங்களை ஆறுதல்படுத்துகிறார், அதேவேளையில் உங்கள் மூலமாக மற்றவர்கள் ஆறுதல் அடையும்படியாகவும் செய்கிறார். சகலவிதமான உபத்திரவங்களிலும் தேவனே பவுலுக்கு ஆறுதலாக இருந்தார். பாவம் பெருகும் இடத்தில் கிருபை பெருகும் என்பதை போல, பாடுகள் பெருகும் போது ஆறுதலும் பெருகும் என்று பவுல் சொல்லுகிறார். பாடுகளும் உபாத்திரவங்களும் வரும்போது, ஆண்டவர் பாடுகளோடும் உபத்திரவங்களோடும் அமிழ்ந்துபோக வேண்டும் என்று அப்படியே விட்டுவிடுகிற தேவனல்ல.

ஒருவர் பாடுகளையும் உபத்திரவங்களையும் சந்திக்காதபோது எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்த முடியும்? ஒருவர் வலியை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்கள் அந்த வலியிலும் வேதனையிலும் கடந்து சென்றால் தான் மற்றவர்கள் படும் பாடுகளை உணர்ந்துகொள்ள முடியும். குழந்தை இல்லாதவர்களின் வேதனையை அதே வலியில் சென்று தேவனுடைய ஆறுதலை பெற்றவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும். வேலை இல்லாதவர்களின் வேதனையை அதே வலியில் சென்று தேவனுடைய ஆறுதலை பெற்றவர்கள் தான் உணர்ந்துகொள்ள முடியும். அதற்காகவே முதலாவது பவுல் பாடுகளோடு தன்னுடைய ஊழியத்தை செய்தார். பவுலுக்கு எப்பொழுதும் ஒரு முள் குத்திக்கொண்டே இருந்தது. பவுல் ஜெபித்தும் ஆண்டவர் அந்த முள்ளை எடுத்து போடவில்லை. காரணம் பவுல் மற்றவர்களுடைய வேதனையை அறிந்து ஊழியம் செய்யும்படி அந்த முள் பவுலை குத்திக்கொண்டே இருந்தது. தீமோத்தேயுவுக்கு தீராத வயிற்று வலி காணப்பட்டது. பவுல் ஜெபித்தும் அவனுக்கு வயிற்று வலி நிற்கவில்லை. கடைசிமட்டும் திராட்சைரசத்தினால் செய்த மருந்துகளை அவன் உட்கொண்டான். இப்படி சரீரத்தில் பாடுகள் இருக்க, மறுபுறம் பவுலுக்கு ஆசியாவில் மிகுந்த உபத்திரவம் காணப்பட்டது. பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று என்று பவுல் கூறினார். இப்படி பாடுகளையும் உபத்திரவங்களையும் கடந்து சென்ற பவுல் சொல்லுகிறார் நம்முடைய தேவன் சகலவிதமான ஆறுதலின் தேவன் என்பதாக.

இயேசுவும் பல பாடுகளை பட்டு முன் மாதிரியை வைத்து போனார். பாடுகளோடும் உபத்திரவங்களோடும் இருக்கிற உங்களுக்கு பிதாவாகிய தேவன் ஆறுதலாய் இருப்பார்.ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் (ஏசா 66:13) என்ற வசனத்தின்படி கர்த்தர் உங்களை தாயை போல தேற்றுவார். இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்.சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார் (1 கொரி 7:6) என்று வசனம் கூறுகிறது. சிறுமையும் எளிமையுமான உங்களுக்கு கர்த்தர் ஆறுதலாய் இருப்பார். அதுபோல உபத்திரவத்தில் இருக்கும் எண்ணிலடங்காத ஜனங்களுக்கு நீங்கள் ஆறுதலாய் இருக்கும்படி திராணியை கொடுப்பார். உங்கள் உபத்திரவம் மற்றவர்களுடைய இரட்சிப்புக்கு ஏதுவாய் இருக்கும். சகலவிதமான ஆறுதலின் தேவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் செய்வார். ஆகையால் கலங்காமல் திகையாமல் இருங்கள். கர்த்தருடைய பர்வதத்தில் எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org